இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் சேவை நிறுவனமான இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் 'naukri' மற்றும் '99acres' ஆகிய பிரபல செயலிகள், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி தெரிவித்துள்ளார்.
இன்ஃபோ எட்ஜ் நிறுவன செயலிகள் நீண்ட காலமாக கூகுளின் ஆப் கட்டணக் கொள்கையை பின்பற்றத் தவறியதே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கூகுள் தங்களது கட்டணக் கொள்கையை மீறும் இந்திய டெவலப்பர்களின் செயலிகளை நீக்குவதற்கான கூகுளின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த செயலிகளை தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் திருமண சேவை செயலியான 'JeevanSathi' மட்டும் தற்போது பிளே ஸ்டோரில் உள்ளது.
கூகுளின் கட்டணக் கொள்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 9ஆம் தேதி முதல் அக்கொள்கையை கடைபிடித்து வருவதாக இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், 'Naukri' மற்றும் '99acres' செயலிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, இன்ஃபோ எட்ஜ் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி, கூகுளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் முறையாக செலுத்தி வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய டெவலப்பர்களுக்கான கூகுளின் கட்டணக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நீக்கம் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்திய மொபைல் மற்றும் இணைய சங்கம் (IAMAI), கூகுள் நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய நிறுவனங்களின் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதை நிறுத்த வேண்டும் என்று IAMAI வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே நான்கு இந்திய நிறுவனங்களின் செயலிகள் நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலைக் கூகுள் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications