மும்பை: டாடா குழுமம் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் பெரும் பகுதியை மக்களுக்காக பயன்படுத்துகிறது என்பது பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது. அதனால் தான் ரத்தன் டாடாவின் மறைவு இந்தியாவையே சோகத்தில் மூழ்கச் செய்தது. டாடா குழும நிறுவனங்கள் மக்களுக்கான நிறுவனங்களாக மாற விதை போட்டது ஒரு பெண்.
அவர்தான் நவாஜ் பாய் சேட். பாரம்பரியமான பார்சி குடும்பத்தில், அர்தேசீர் மேர்வாஞ்சி சேட் என்பவருக்கு மகளாக பிறந்தவர்தான் நவாஜ் பாய் சேட். டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்செட்ஜி டாடாவின் மகனான ரத்தன் ஜி டாடாவுக்கும் நவாஜ் பாய் சேத்துக்கும் 1892 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

இந்தியாவில் டாடா குழுமம் ஆதிக்கம் செலுத்தும் தொழில் குழுமமாக வளர்ந்து வந்த காலத்தில் தான் நவாஜ்பாய் குடும்பத்தில் மருமகளாக இணைந்தார்.
1915 ஆம் ஆண்டு நவாஜ் பாயும் ரத்தன் ஜி டாடாவும் இங்கிலாந்துக்கு குடிப்பெயர்ந்தனர். அப்போது நவாஜ் பாய் இங்கிலாந்து அரசு குடும்பத்தோடு நெருக்கமானார். மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசின் மேரி ஆகியோருக்கு நெருங்கிய நண்பரானார்.
இந்நிலையில் 1918 ஆம் ஆண்டு 41 வயதிலேயே எதிர்பாராத விதமாக ரத்தன் ஜி டாடா காலமானார் . இளம் வயதிலேயே கணவரை இழந்த நவாஜ்பாய் தொழிலில் ரத்தன் ஜி டாடாவின் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் உண்டானது.
படிப்படியாக தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட நவாஜ்பாய், 1925 ஆம் ஆண்டில் முதன்முறையாக டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். டாடா சன்ஸ் குழுமத்தில் முதல் பெண் இயக்குனர் இவர்தான். நவாஜ் பாய் தலைமையின் கீழ் தான் டாடா சன்ஸ் குழும நிறுவனங்கள் பல மாற்றங்களை சந்தித்தன. ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக இருந்த டாடா குழுமத்தில் பெண்களுக்கு இருந்த பல தடைகளை உடைத்தெறிந்தார்.
டாடா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களை விரிவாக்கம் செய்தது பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தது என அவருடைய தலைமையின் கீழ் குழுமம் நல்ல வளர்ச்சி அடைந்தது. அவர், 1919 ஆம் ஆண்டு சர் ரத்தன் டாடா அறக்கட்டளையை உருவாக்கினார். கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமையில் வாழக்கூடிய குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த அறக்கட்டளையானது உருவாக்கப்பட்டது.
1932 ஆம் ஆண்டு நவாஜ் பாய் இந்த அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்றார். ஒரு கார்ப்பரேட் நிறுவன தலைமை பொறுப்பில் இருந்த இவர் நம்முடைய தொழிலை மக்களுக்கான தொழிலாகவும் நமக்கு கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை பொது நலனுக்காகவும் செலவிட வேண்டும் என்பதையும் செய்து காட்டி ஒரு முன்னுதாரணமான பெண் தொழிலதிபராக திகழ்ந்தார்.
மேலும் ரத்தன் டாடா இன்ஸ்டியூட் என்ற ஒரு இன்ஸ்டிடியூட்டை நிறுவி வயதான மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க தொடங்கினார். தன்னுடைய சொத்தின் பெரும்பாலான பகுதிகளை அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்.
1965 ஆம் ஆண்டு இவர் காலமானார், ஆனால் ரத்தன் டாடா உள்பட அடுத்தடுத்த வந்த டாடா குழும தலைவர்கள் அனைவரும் இவருடைய பாதையை பின்பற்றி லாபத்திற்காக மட்டுமில்லாமல் சமூகத்திற்காகவும் தொழில் புரிய வேண்டும் என்பதை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications