இந்திய கார்ப்ரேட் துறையில் பெரும் சர்ச்சையாக இருந்த ரேமண்ட் குடும்பத்தின் பிரச்சனை தற்போது வீட்டை விட்டு போர்ட் ரூம்-க்கு வந்துள்ளது.
ரேமண்ட் குழுமத்தைச் சேர்ந்த ஜே.கே. இன்வெஸ்டர்ஸ் (பம்பாய்) (JKI), ரேமண்ட் கன்ஸ்யூமர் கேர் (RCCL), ஸ்மார்ட் அட்வைசரி அண்ட் ஃபின்சர்வ் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலிருந்து நவாஸ் மோடி சிங்கானியா நீக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் வியாழக்கிழமை பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளன.

ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா மற்றும் அவரது மனைவி நவாஸ் மோடி மத்தியிலான பிரச்சனை, விவாகரத்து, 75 சதவீத சொத்து கோரியது ஆகிய பிரச்சனைகளைத் தொடர்ந்து 3 நிறுவனங்களில் நிர்வாக குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கடந்த மார்ச் 31ம் தேதி நடந்த அவசரக்கால பொதுக்குழுக் கூட்டத்தில் (EGM) இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நவாஸ் மோடி சிங்கானியா-வின் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக இரண்டு நிறுவனங்களின் இயக்குநர் குழுவை அணுகி, தனது பதவி நீக்கத்தை எதிர்த்து கேள்விகேட்டு உள்ளார்.
இதேவேளையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ரேமண்ட் நிறுவனம் இதுவரை நவாஸ் மோடி சிங்கானியாவை இயக்குநர் குழுவில் இருந்து நீக்குவதற்கான எந்த தீர்மானத்தையும் முன்வைக்கவில்லை என்றாலும், இதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவாஸ் மோடி சிங்கானியாவும் அவரது முன்னாள் கணவர் ரேமண்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி கௌதம் சிங்கானியாவும் கசப்பான விவாகரத்தை, தீர்க்க தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் 3 நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து நீக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் 2023 நவம்பர் மாதத்தில் தங்களது பிரிவை அறிவித்திருந்தனர்.
ஸ்மார்ட் அட்வைசரி அண்ட் ஃபின்சர்வ் மற்றும் ரேமண்ட் கன்ஸ்யூமர் கேர் ஆகிய இரண்டு நிறுவனங்களில் இருந்தும் தன்னை நீக்கம் செய்ததாகத் தகவல் கிடைத்த பிறகு, அந்த நிறுவனங்களின் இயக்குநர் குழு முன்பு நவாஸ் மோடி சிங்கானியா ஆஜராகி விளக்கத்தைக் கோரியுள்ளார்.
"கௌதம் சிங்கானியா செய்த தவறுகளையும், கொடுமைகளையும் வெளிப்படுத்தியதில் இருந்து எனக்குப் பல வகையில் அவர் துன்புறுத்தி வருகிறார். முதலில் தாக்குதல், இப்போது பதவி நீக்கம்," என்று மும்பையில் உள்ள ரேமண்ட் அலுவலகத்திற்குள் நுழையும் முன் நவாஸ் மோடி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நவாஸ் மோடி சிங்கானியா மற்றும் கௌதம் சிங்கானியா தங்களது 20 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தனர். பிரிவை அறிவிக்கும் முன்பு நவாஸ் மோடி மற்றும் அவரது மூத்த மகளை கௌதம் சிங்கானியா அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும், நீதா அம்பானியின் உதவியுடன் தனது சொந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.
அதன் பிறகு, கௌதம் சிங்கானியா - நவாஸ் மோடி மத்தியிலான விவாகரத்து தீர்க்கத்திற்கான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை தற்போது முறிந்திருப்பதாகவும், அதன் காரணமாகவே நிறுவனங்களில் இருந்து நவாஸ் மோடி சிங்கானியா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் துறை வட்டாரங்கள் கருதுகின்றன.


Click it and Unblock the Notifications