இந்தியாவின் முன்னணி தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி நிறுவனம் திடீரென தங்களுடைய பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி இருக்கிறது. இது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போர் காரணமாக இந்தியாவிற்கு ஒரு மாதமாக கச்சா எண்ணெய் வரவில்லை. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை கட் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை, ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது, நாட்டிலும் போதிய இருப்பு உள்ளது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு தொடர்ச்சியாக கூறி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு வரை 90 டாலருக்கு கிடைத்த கச்சா எண்ணெய் தற்போது ஒரு பேரல் 160 டாலருக்கு தான் கிடைக்கிறது. இந்த சூழலில் தான் கடந்த வாரம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோல்களின் விலையை 2 ரூபாய் வரை உயர்த்தின. சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
இந்த சூழலில் இந்தியாவின் முன்னணி தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி நிறுவனம் திடீரென தங்களுடைய பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி இருக்கிறது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.30 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயாரா பெட்ரோல் பங்குகளில் இன்று காலை முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் 107.93 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 97.22 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது, ஆனால் நயாரா எனர்ஜி தரப்பில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் ,டீசல் விலையை உயர்த்தவில்லை.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக நயாரா எனர்ஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் நேற்றைய தினம் பராமரிப்பு பணி எனக்கூறி 35 நாட்களுக்கு தங்களுடைய ஆலையை மூடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் சுமார் 8 சதவீதம் பங்களிப்பு கொண்ட நயாராவின் ஆலைகள் 35 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இது நாட்டில் மேற்கொண்டு பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் 35 நாள் முடக்கத்திலும் தங்களுடைய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தடையில்லாமல் செயல்படுவதற்கு போதுமான இருப்பு இருப்பதாக நயாரா நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications