இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் மிகவும் முக்கியமான யூனிகார்ன் நிறுவனமாகத் திகழும் OYO குழும நிறுவனங்கள் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கார்பரேட் இன்சால்வென்சி தீர்மானத்தை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. NCLT அமைப்பின் இந்த உத்தரவுக்குக் காரணம் 16 லட்சம் ரூபாய் நிலுவை தொகை கொண்ட ஒரு வழக்கு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?!
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொரோனா பாதிப்புகளைக் கடந்து வளர்ச்சிப் பாதையில் மெல்ல மெல்ல நகர்ந்து வரும் நிலையில் ஒரு யூனிகார்ன் நிறுவனம் மீது விதிக்கப்பட்டு உள்ள இந்த உத்தரவும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
OYO ஸ்டார்ட்அப் யூனிகார்ன்
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் சேவை மற்றும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ஓயோ இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று ஒட்டுமொத்த ஹாஸ்பிடாலிட்டி துறையையும் மோசமான நிலைக்குத் தள்ளியதில் OYO நிறுவனமும் பாதிக்கப்பட்டுக் கடுமையான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
ஊழியர்கள் பணிநீக்கம்
கொரோனா காலத்தில் பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் பல முக்கிய நகரங்களில் இருக்கும் அலுவலகத்தை நிரந்தரமாக மூடி செலவுகளைப் பெரிய அளவில் குறைத்தது. ஆயினும் புதிய வர்த்தகம் பெற முடியாமல் தவிக்கும் காரணத்தால் OYO தொடர்ந்து தடுமாற்றம் அடைந்து வருகிறது.
ரூ.16 லட்சம் நிலுவைத் தொகை
இந்நிலையில் ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் OYO ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனத்திற்குச் செயல்பாட்டுக் கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று 16 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை அளிக்கவில்லை என இந்நிறுவனம் மீது வழக்குத் தொடுத்துள்ளது.
கார்பரேட் இன்சால்வென்சி தீர்மானம்
இந்த வழக்கை விசாரித்த NCLT நீதிமன்றம் மார்ச் 30ஆம் தேதி விசாரணை செய்து ஏப்ரல் 4ஆம் தேதி OYO ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனம் மீது நொடித்துப்போன நிறுவனத்திற்குத் தீர்மானம் எடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உடனடியாக மேல்முறையீடு செய்துள்ள OYO நிறுவனத்திற்கு ஏப்ரல் 15 வரையில் தனது பக்கத்தின் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
OYO திவால்
இந்நிலையில் நேற்று இரவு முதல் சமுக வலைத்தளத்தில் OYO நிறுவனம் திவாலானதாகப் பதிவுகள் வைரலான நிலையில் இந்நிறுவனத்தின் இளம் தலைவர் ரித்தேஷ் அகர்வால் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். OYO திவால் ஆகியுள்ளதாகப் பரவிவரும் தகவல் முற்றிலும் பொய்யானது. 16 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகைக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் முடிவுகள் தான் இது. இதற்காக மேல்முறையீடு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
மேலும் குறிப்பிட்ட தொகையைச் சில கட்டுப்பாடுகளுடன் வங்கியில் வைப்புச் செய்துள்ளோம். இதேவேளையில் NCLT அமைப்பிடம் OYO கொரோனா பாதிப்பில் இருந்து நிறுவனம் மீண்டு வருகிறது, விரைவில் லாபம் அடையும் நிலைக்கு உயரும் என்றும், கார்பரேட் இன்சால்வென்சி தீர்மானத்தை நீக்கக் கோரியும் மேல்முறையீடு செய்துள்ளோம் என OYO தலைவர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தீர்ப்பு OYO குழுமத்தின் துணை நிறுவனமான YO ஹோட்டல்ஸ் அண்ட் ஹோம்ஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications