அதிரடியாக 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவை பிறப்பித்திருக்கிறார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப். டொனால்ட் ட்ரம்ப் தனது ஆலோசகராக எலான் மஸ்க்கை நியமித்திருக்கிறார். அவருடைய பரிந்துரையின் படியே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் அதிபராக பதவியேற்ற நாள் முதலாக அதிரடியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். அதில் ஒன்றுதான் இந்த ஆட் குறைப்பு நடவடிக்கை.
இந்தப் பணி நீக்கம் குறிப்பாக எரிசக்தி, வேளாண் துறை, சுகாதாரத்துறை மற்றும் மனித சேவை துறைகளில் உள்ள தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு ஏற்ப பல்வேறு துறையினரும் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். அந்த வகையில் வரி வசூல் நிறுவனமான இன்டர்னல் ரெவென்யூ சர்வீஸ் அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஏப்ரல் 15 ஆகும். ஆனால் அதற்கு முன்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு முன்னதாக செயல்திறனற்ற துறைகளாக கருதப்படும் துறைகளில் பணிபுரிபவர்கள் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்தால் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்தார். அதற்கு இணங்க சில நபர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகின. அதோடு ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலும் எந்த வேலையும் செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்டு 75,000-த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தாமாகவே ராஜினாமா செய்ய முடிவெடுத்தனர்.
இது 2.3 மில்லியன் சிவில் அதிகாரிகளில் 3 சதவீதமாகும். அரசு அதிக கடனில் மூழ்கியுள்ளதாகவும், வீண்விரையம் மற்றும் மோசடிக்கு அதிக பணத்தை இழந்ததாகவும் கூறினார். அதோடு கடந்த ஆண்டு 36 ட்ரில்லியன் டாலர் கடன் இருந்ததாகவும் 1.8 ட்ரில்லியன் டாலர் பண பற்றாக்குறை இருந்ததாகவும் தெரிவித்தார். அதோடு அரசுக்கு சீர்திருத்தம் தேவை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப்-பின் இந்த நடவடிக்கைக்கு சில குடியரசு கட்சியினர் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஆனால் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்கின் இந்த வெளிப்படையான அணுகுமுறை குறித்து பலர் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
ஆனால் ட்ரம்ப் கூறியபடி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுமா? என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்றும் சில தொழிற்சங்கங்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவருடைய இந்த நடவடிக்கைக் பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும் பணிநீக்க செயல் முறையில் தொடர்ந்து இறங்கியுள்ளார் டிரம்ப். அதேபோல அமெரிக்காவின் மத்திய வங்கியான அரசு அதிக கடனில் இருப்பதாகவும், தேவையற்ற பதவிகளுக்கு அதிக அளவிலான சம்பளம் வழங்கப்படுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications