டெல்லி: இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் பான் கார்டு வைத்திருப்பதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 42.10 கோடி ஆண்களும் ,31.05 கோடி பெண்களும் பான் கார்டு வைத்துள்ளனர். மொத்தமாக பார்த்தால் இந்தியாவில் 74.67 கோடி பேரிடம் பான் கார்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 74.67 கோடி பான் கார்டுகளில் சுமார் 14 கோடி பான் கார்டுகள் இதுவரை ஆதாருடன் இணைக்கப்படவில்லை. எனவே இவை விரைவில் செயலற்றவையாக போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பான் கார்டு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நாட்டில் 67.67 கோடி பேர் பான் கார்டு வைத்திருந்தனர் அது இந்த ஆண்டு மார்ச் மாதம் 74.67 கோடி என அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகால இடைவெளியில் நாம் பார்க்கும் போது இது 2500% உயர்ந்துள்ளது 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் பான் கார்டு வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை 2.76 கோடி.
பான் கார்டு வைத்திருப்பவர்களில் கிட்டத்தட்ட 98 சதவீதம் பேர் தனிநபர்கள். அதேபோல பான் கார்டு வைத்திருப்பவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. Permanent Account Number -PAN, தமிழில் நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படுகிறது.
பொதுவாக பான் கார்டுகள் நிதி பரிமாற்றங்களுக்கு மிக முக்கியமானது.வரி செலுத்துவது மற்றும் வரி பெறுவது, முதலீடு ,வருமான வரி தாக்கல் ஆகியவற்றுக்கு பான் கார்டு கட்டாயம். இந்திய வருமானவரிச் சட்டம் கிட்டத்தட்ட 18 வகையான நிதி பரிமாற்றங்களுக்கு பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம் என கூறுகிறது.
இந்தியாவில் அண்மைக்காலமாக பெண்களும் அதிக அளவில் முதலீடு செய்வதன் காரணமாகவே பான் கார்டு வைத்திருக்கும் ஆண் பெண்களுக்கு இடையிலான வித்தியாசம் குறைந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள 74.67 கோடி பான் கார்டுகளில் 60.5 கோடி பான் கார்டுகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. பானுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கேடு கடந்த ஆண்டே முடிந்துவிட்டது.
இப்படி ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழந்து போனதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கால அவகாசத்தை தாண்டி 2023 ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு ஆதாருடன் பான் எண்ணை இணைத்தவர்களிடமிருந்து 601.97 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications