பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. இந்திய வீரர்களும் வெண்கலம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்ற வண்ணம் உள்ளனர். இந்த முறை போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் பிரிவில் அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெள்ளி பதக்கம் வென்றார்.
முன்னதாக நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், அட்லிஸ் என்ற விசா விண்ணப்ப நிறுவனம் சார்பில் தங்களிடம் விண்ணப்பிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் இலவச விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மொஹக் நஹ்தா தான் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. இவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் இந்த பதிவை வெளியிட்டிருந்தார்.

தன்னுடைய பதிவின் கீழ் கருத்து தெரிவித்து மின்னஞ்சல் முகவரியை வழங்குபவர்களுக்கு தன்னுடைய நிறுவனம் சார்பில் விசா நடைமுறைக்கான விவரங்கள் அனுப்பி வைக்கப்படுமென அவர் கூறி இருந்தார். ஆனால் எதிர்பார்த்த வகையில் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்லவில்லை. மாறாக பாகிஸ்தான் வீரர் தங்க பதக்கமும், நீரஜ் சோப்ரா வெள்ளியும் வென்றார்.
நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றிருந்தாலும் என்னுடைய வாக்குறுதியில் மாற்றமில்லை என தெரிவித்திருக்கும் அட்லிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி மொஹத் நஹ்தா, என்ன பதக்கம் என்பது முக்கியமல்ல, பதக்கம் வென்றதன் மூலம் நமக்கு கிடைக்கும் உத்வேகம் தான் முக்கியம் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக லிங்குடின் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர் என்னுடைய வாக்குறுதியில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளார் . தன்னுடைய பதிவின் கீழ் கருத்து தெரிவித்தவர்களுக்கு இலவச விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யப்போகிறேன் என கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய பதிவு செய்தவர்களின் மின்னஞ்சலுக்கு தன்னுடைய நிறுவனம் விசா நடைமுறைகள் குறித்த தகவலை அனுப்பும். அவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்களோ அந்த நாட்டிற்கு இலவசமாக விசா தயார் செய்து தரப்படும் எனக் கூறியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் நீரஜ் சோப்ரா தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் என்ற இந்திய தடகள வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். எனவே இந்த முறையும் அவர் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நீடித்தது.
இந்த முறையும் முதலிடத்தை பிடிப்பதற்காக அவர் கடுமையாக போராடினார். இருந்தாலும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதிம் 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார் . நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தொலைவிற்கு ஈட்டி எறிந்தார். நீரஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தாலும் அதன் மூலம் இந்தியர்களுக்கு இலவச விசாவை பெற்று தந்திருக்கிறார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications