இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் அண்மையில் மிகப்பெரிய ஒரு ஜென் ஸீ போராட்டத்தை சந்தித்தது. நேபாள நாட்டு பிரதமருக்கு எதிராக ஒன்று திரண்டு ஜென் ஸீ இளைஞர்கள் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினார்கள்.
நேபாள நாட்டு அரசு திடீரென பல்வேறு சமூக வலைதள செயலிகளுக்கும் தடை விதித்தது . இதன் காரணமாக மெதுவாக சிறிய அளவில் தொடங்கிய இளைஞர்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இளைஞர்கள் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மட்டும் எதிர்த்து போராடவில்லை அதற்கு மாறாக அரசின் ஊழலையும் எதிர்த்து வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளும் எதிர்த்து தான் பெரும் அளவில் குரல் கொடுத்தார்கள் .

இளைஞர்கள் அமைச்சர்கள் ,அதிகாரிகள் மற்றும் பிரதமரின் வீட்டையே சூறையாடினார்கள். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தார்கள். ஜென் ஸீ இளைஞர்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் கே பி ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தான் நேபாளத்தில் வன்முறைகள் கட்டுக்குள் வந்தன.
இதனை அடுத்து நேபாள நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஆன சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து அவர் நாட்டில் பொது தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார் . இதன்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி நேபாளத்தில் பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வாக்காளர் பட்டியலில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக நேபாளத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதினை 18 இலிருந்து 16 ஆக குறைப்பதற்கான சட்ட திருத்தத்திற்கு இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி ஒப்புதல் வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அவர் தேசிய அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பு அதிகரிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதினை 16 ஆக குறைக்கிறேன் என கூறியுள்ளார்.
இது அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார். 16 வயதில் இருப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்காளர் அட்டை பெற்று கொள்ளலாம் ஆனால் 18 வயது நிரம்பினால் தான் அவர்களால் வாக்களிக்க முடியும்.
இடைக்கால பிரதமர் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்வேன் என உறுதி அளித்திருக்கிறார். அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை சேர்க்க விண்ணப்பம் செய்யலாம் என்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் . அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலை வெற்றி கரமாக நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தான் விரிவான ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications