உலகின் மிகப்பெரிய உணவுப் பொருட்கள் விற்பனை நிறுவனமான நெஸ்லே தங்கள் ஊழியர்களில் 16,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .
உலக அளவில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளன. இந்தியாவில் டிசிஎஸ் நிறுவனம் 12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது. அவர்களில் சுமார் 6000 பேர் வரை வேலையில் இருந்து நீக்கி விட்டது. கூகுள், மைக்ரோசாப்ட் ,அசெஞ்சர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கின்றன .

2025 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மட்டும் 212 டெக் நிறுவனங்கள் 91 , 719 பேரை வேலையிலிருந்து நீக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. இதில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். இத்தகைய சூழலில் தான் உலகின் முன்னணி பேக்கேஜ் உணவு விற்பனை நிறுவனமான நெஸ்லே தங்கள் ஊழியர்களின் 16 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அண்மையில் தான் நெஸ்லே தலைமை செயல் அதிகாரியாக இருந்த லாரண்ட் ஃபிரெக்ஸி ஊழியர் ஒருவரோடு தொடர்பில் இருந்ததன் காரணமாக அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக பிலிப் நவராட்டில் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் . இத்தகைய சூழலில் புதிய தலைமை செயல் அதிகாரியான பிலிப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நெஸ்லே நிறுவனம் தன்னுடைய உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் பல்வேறு உள்கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது நெஸ்லே நிறுவனத்தில் 2,77,000 பேர் வேலை செய்து வரக்கூடிய சூழலில் அவர்களில் 12,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்திருக்கிறார். நிறுவன விற்பனையும் லாபத்தையும் பெருக்குவதற்காகவும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை கொண்டு வருவதற்காகவும் இந்த பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார் .
உலகம் மாறி வருகிறது அதைவிட வேகமாக மாற வேண்டிய சூழல் நெஸ்லேவிற்கு உண்டாகி இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார். நிறுவனத்தில் வேலை செய்யும் வைட் காலர் ஊழியர்கள் தான் இந்த பணிநீக்க நடவடிக்கை மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இதற்கிடையே நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன்படி நிறுவனத்தின் நிகர லாபம் என்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 23.6% குறைந்து இருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் 10.6 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் லாபம் என்பது குறைந்திருக்கிறது . உள்ளீட்டு செலவினங்கள் அதிகரித்ததே நிறுவனத்தின் லாபம் குறைவதற்கு காரணமாக இருக்கிறது. பால் மற்றும் கொக்கோ பவுடரின் விலை உயர்வு தான் நிறுவனத்தின் லாபம் குறைவதற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications