நெதர்லாந்து பொருளாதாரம் இரண்டாவது காலாண்டாக பொருளாதாரத்தில் சரிவை பதிவு செய்த காரணத்தால் அதிகாரப்பூர்வமாக ரெசிஷனுக்கு தள்ளப்பட்டு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியதில் இருந்து ஒட்டுமொத்த ஐரோப்பிய பொருளாதாரமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி அனைத்தும் எரிபொருள் விலையை சார்ந்து இயக்கப்படும் பொருளாதார சக்கரம், ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் ஐரோப்பாவை பாடாய்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து பிரிட்டன் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் வேளையில், ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு ஜெர்மனியும் ரெசிஷனுக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் தற்போது நெதர்லாந்து நாட்டின் காலாண்டு அடிப்படையிலான ஜிடிபி -0.3 சதவீதமாக சரிந்ததால் அந்நாட்டின் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது என்று நெதர்லாந்து நாட்டின் புள்ளியியல் அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட முதல் கணிப்புகள் காட்டியுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதாவது மார்ச் காலாண்டில் -0.4 சதவீதமாக சரிந்தது. இதை தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக ஜூன் காலாண்டிலும் ஜிடிபி -0.3 சதவீதமாக சரிந்ததால் ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் 2 காலாண்டுகளாக தொடர்ந்து எதிர்மறை வளர்ச்சி அதாவது Negative-ல் இருந்தால் ரெசிஷனுக்குள் நுழைந்ததாக பொருள். இதன் மூலம் நெதர்லாந்த் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்தது போல் இதற்கு முன்பு ஜெர்மனி, பிரிட்டன் ஆகியவை ஐரோப்பிய சந்தையில் வீழ்ந்துள்ளது.
யூரோப்பியாவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் நெதர்லாந்து பொருளாதாரம் கோவிட்-19 சரிவில் இருந்து விரைவாக மீண்டதன் காரணமாக 2021 மற்றும் 2022ஆம் ஆண்டில் சுமார் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.

ஆனால் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ஏற்பட்ட ரஷ்யா - உக்ரைன் போப் மூலம் முதல்முறையாக நெதர்லாந்து நாட்டின் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது. தற்போது நெதர்லாந்து நாட்டில் உணவு விலைகள் மற்றும் எரிபொருள் விலை பணவீக்கத்தின் காரணமாக அதிகப்படியான விலை நிலவரத்தில் உள்ளது. இதனால் மக்களின் செலவின அளவுகள் பெரிய அளவில் கட்டுப்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதாவது மார்ச் காலாண்டில் நெதர்லாந்து நாட்டின் நுகர்வோர் செலவினம் 1.6 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் அந்நாட்டின் ஏற்றுமதி அளவும் 0.7 சதவிகிதம் குறைந்துள்ளது.
நெதர்லாந்து நாட்டின் பணவீக்கம் எப்போதும் இல்லாமல் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 14.5 சதவிகிதம் என உச்சத்தை எட்டியதில் இருந்து தற்போது பெரிய அளவில் குறைந்தாலும், 6 சதவீதம் என்ற அதிகப்படியான நிலையே தொடர்கிறது.


Click it and Unblock the Notifications