புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டதை அடுத்து மாத சம்பளக்காரர்கள் அனைவரும் கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான பணிகளை தொடங்கி இருப்பார்கள். 2024 - 2025 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களில் ஐடிஆர் 2 படிவத்தை பயன்படுத்துபவர்களுக்கு வருமான வரித்துறை சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.
தங்களின் வருமான வரி கணக்கை ஐடிஆர் 2 படிவத்தின் மூலம் தாக்கல் செய்பவர்களுக்கு அதற்கான செயல்முறைகள் எளிமையானதாக மாற்றப்பட்டுள்ளன. வருமான வரித்துறை ஐடிஆர் 2 படிவத்திற்கு புதிய எக்செல் அடிப்படையிலான ஒரு பயன்பாட்டு பதிப்பை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் வணிகம் அல்லது தொழில் முறை வருமானம் இல்லாத தனிநபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் எளிமையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். இந்த அப்டேட் 25, மார்ச் 2025 அன்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் பிரிவு 139 (8 ஏ) இன் கீழ் திருத்தப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய முடியும்.
யாராவது வருமான கணக்கு தாக்கலில் தவறு செய்தால் அல்லது தங்கள் வருமானத்தில் ஏதேனும் விவரங்களை புதுப்பிக்க வேண்டியிருந்தால், இந்த அப்டேட்டை கொண்டு எளிமையாக திருத்தலாம். இந்த புதிய அம்சம் சம்பளம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பிற வணிகம் அல்லாத வரி செலுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த புதிய அமைப்பு வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை அப்டேட் செய்ய அனுமதிக்கிறது. வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும் போது நமது வருமானத்திற்கு ஏற்ப ஐடிஆர் 1, 2,3,4 உள்ளிட்ட முறைகளில் படிவத்தை தேர்வு செய்து நாம் வரி தாக்கல் செய்து கொள்ளலாம். அந்த வகையில் ஐடிஆர்- 2 என்பது ஆண்டு வருமானம் 50 லட்சத்திற்கு மேல் இருப்பவர்கள் அல்லது வாடகை, மூலதன ஆதாயங்கள் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்கும் தனிநபர்களுக்கானது.
நிறுவனங்களில் இயக்குநராக பொறுப்பு வகிக்கும் நபர்களும் ஐடிஆர்-2 மூலம் தான் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியும். பட்டியலிடப்படாத நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கும் நபர்கள், வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருக்கும் நபர்கள் ஐடிஆர்-2 ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே தனிநபர்கள் வருமான வகையை பொறுத்து சரியான ஐடிஆர் படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மொத்த ஆண்டு வருமானம் 50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அல்லது வருமானமானது சம்பளம், ஓய்வூதியம், வட்டி, ஈவுத்தொகை அல்லது ஒரு சொத்தின் வாடகையிலிருந்து மட்டுமே வந்தால், ஐடிஆர்-1 ஐ நிரப்ப வேண்டும்.
வருமான வரித்துறை இது தொடர்பாக கொண்டு வரும் மாற்றங்களை அவ்வப்போது செய்திகளிலும் தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications