சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் வாழ்க்கை கனவாகும். இந்தக் கனவை நனவாக்கச் சிறுகச் சிறுகச் சேமித்து நிலம் வாங்கி வீடு கட்டும் வழக்கம் நம்மிடம் அதிகம் உள்ளது. இருப்பினும், வாகனங்களுக்காக வீட்டிலேயே போதுமான இடவசதி ஒதுக்கப்படாமல், தங்கள் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களைச் சாலைகளில் நிறுத்துவது தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிவதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நகர்ப்புறச் சாலைகளை நெரிசலில் இருந்து விடுவிக்கவும் தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இந்தச் சிக்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிதாக வீடு கட்டுவோர் கட்டாயமாக வாகன நிறுத்துமிட வசதியை (Parking Facility) ஏற்படுத்த வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பான விதிகள் இருந்தாலும், தனி வீடுகளுக்கு இந்த விதி எந்த அளவுக்குப் பொருந்தும் என்பதில் குழப்பங்கள் நிலவி வந்தன. அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வாகன நிறுத்துமிட விதிகள் தெளிவாக வகுக்கப்பட்டிருந்த நிலையில், தனி வீடுகளுக்கான விதிகள் குறித்து சந்தேகங்கள் இருந்தன.
இந்தக் குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், தனி வீடுகளுக்கான வாகன நிறுத்துமிடம் தொடர்பாக விதிகள் வகுக்கப்படும் என தமிழ்நாடு அரசு முன்னரே அறிவித்திருந்தது. தற்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இது குறித்து ஒரு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்தப் பொதுக் கட்டட விதிகளில் தனி வீடுகளுக்கான வாகன நிறுத்துமிடம் தொடர்பான சில பகுதிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தப்பட்ட விதிகள் பின்வரும் முக்கியமான அம்சங்களை வலியுறுத்துகின்றன. அதாவது, 3,300 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள தனி வீடுகளுக்கு கட்டாயமாக இரண்டு கார்கள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்குரிய இடத்தை வீட்டிலேயே ஒதுக்க வேண்டும்.
3,300 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள வீடுகளுக்கு நான்கு கார்கள் மற்றும் நான்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடங்களில் இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதும் அவசியம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்தக் கட்டாய விதிகள் நடைமுறைக்கு வருவதன் மூலம், பொதுச் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறைக்கப்படும் எனவும், நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசல் தீரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டைக் கட்டும்போதே பார்க்கிங் வசதிக்கான திட்டமிடலைச் செய்வது இனி தமிழ்நாட்டில் கட்டாயமாகிறது.


Click it and Unblock the Notifications