சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஹைட்ரஜன் புத்தாக்க மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் 2024 என்ற தலைப்பிடப்பட்ட மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தாக்க மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், ஐஐடி மெட்ராஸ், கைடன்ஸ் தமிழ்நாடு ஆகியவற்றுடன் இணைந்து ஹைட்ரஜன் ஆய்வு மையத்தை நிறுவுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர், ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து இந்த மையம் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஹூண்டாய் நிறுவனம் 180 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இந்த ஆய்வு மையமானது ஐஐடி மெட்ராஸுக்கு சொந்தமான தையூர் கேம்பஸில் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைய இருக்கிறது. இந்த மையம் வரும் 2026 ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாகனங்களில் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு முக்கியத்துவம் குறித்து இங்கே ஆய்வுகள் நடைபெறும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை உருவாக்கக்கூடிய எலக்ட்ரோலைசர்களை மேம்படுத்துவது மற்றும் பரிசோதனை செய்வது, எரிபொருள் செல்களை உருவாக்குவது என்பன உள்ளிட்ட பணிகள் இங்கே நடைபெற இருக்கின்றன.
இந்தியாவில் கார்பன் வெளியீட்டை குறைக்கவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மையம் பசுமை எரிசக்தி பிரிவில் தொடங்கும் பல்வேறு ஸ்டார்ட் அப்களுக்கும் உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனரும் தலைமை உற்பத்தி அதிகாரியுமான கோபாலகிருஷ்ணன் சாத்தாபுரம் சிவராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வைக்கு உதவி செய்யும் வகையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்த ஹைட்ரஜன் தொழில்நுட்ப ஆய்வு மையத்தை நிறுவுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு மையம் தமிழ்நாட்டில் ஹைட்ரஜன் தொழில்நுட்ப பயன்பாட்டினை அதிகரிப்பதற்கு உதவி செய்யும் என கூறினார். ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியாவின் பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக ஐஐடி மெட்ராஸ் திகழ்ந்து வருகிறது என கூறினார். ஐஐடி வளாகத்தில் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படுவது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications