காலையில் எழுந்து ரெடியாகி, போக்குவரத்து நெரிசல்களை கடந்து சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு செல்வது என்பது பெரிய போராட்டமாகி விட்டது. வாகனம் பழுதாவது, போக்குவரத்து நெரிசல் ஆகிய காரணங்களால் சில சமயங்களில் நாம் அலுவலகத்துக்கு தாமதமாக செல்ல நேரிடுகிறது. ஆனால் இது வரை நாம் கேள்விப்படாத ஒரு பிரச்னையால் இங்கே ஒருவர் அலுவலகத்திற்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
பிரதிக் ராய் என்பவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தான் குறித்து சமூக வலைதளங்களில் தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதிக் ராய் வழக்கம் போல அலுவலகத்திற்கு செல்ல தயாராகியுள்ளார். தன்னுடைய ஏதெர் மின்சார ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துள்ளார், அப்போது ஸ்கூட்டர் அப்டேட்டிங் என திரையில் காட்டியுள்ளது. இதனை புகைப்படமெடுத்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது ஒரு புது பிரச்சனை, காலையில் வேலைக்கு செல்வதற்காக நான் என்னுடைய ஏதர் ஸ்கூட்டரை ஸ்டார் செய்தேன், ஆனால் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை மாறாக அது அப்டேட் ஆகி கொண்டு இருக்கிறது, அலுவலகத்திற்கு லேட்டாக தான் செல்லப் போகிறேன் என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு ஆயிரக்கணக்கான எக்ஸ் தள பயனாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பகிரப்பட்டது முதல் சுமார் நான்கு லட்சம் பேர் இந்த பதிவை பார்த்துள்ளனர். மேலும் 5 ஆயிரம் பேர் இதனை லைக் செய்துள்ளனர்.
பலர் இது ஆச்சரியம் தருகிறது என கூறியுள்ளனர். ஒரு பயனாளரோ ஆக்டிவா தான் சிறந்த ஸ்கூட்டர் எனக் கூறியுள்ளார். மற்றொரு பயனாளரோ வேலை எப்போது வேண்டுமானாலும் வரும் போகும், ஆனால் அப்டேட் என்பது தான் உங்களுக்கு பாதுகாப்பானது எனக் கூறியுள்ளனர்.
வேலைக்கு போய்க் கொண்டிருக்கும் போது பாதியில் அப்டேட் ஆகவில்லை அதுவரைக்கும் பரவாயில்லை என ஒருவர் கூறியுள்ளார். ஒரு பயனாளர், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அலுவலகங்கள் இனி இதனை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications