மத்திய பட்ஜெட் 2026-க்கு முன், பழைய வருமான வரி முறையை அரசு நீக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவின. ஆனால் அரசு அது குறித்த எந்த தகவலையும் பட்ஜெட்டில் வெளியிடவில்லை. பெரும்பாலான வரி செலுத்துவோர் புதிய வரி முறைக்கு ஏற்கெனவே மாறியுள்ளதால், பழைய முறைக்கு காலக்கெடு விதிக்கும் எண்ணம் இல்லை என மத்திய நேரடி வரிகள் வாரிய (CBDT) தலைவர் ரவி அகர்வால் PTI-யிடம் தெரிவித்தார்.
அகர்வால் கூற்றுப்படி, சுமார் 88% தனிநபர் வரி செலுத்துவோர் புதிய முறைக்கு மாறியுள்ளனர். இது அரசு அறிமுகப்படுத்திய எளிய வரி அமைப்புக்குக் கிடைத்த வலுவான வரவேற்பின் அடையாளம். வரி முறை தேர்வு தனிப்பட்ட விருப்பமே என்றாலும், புதிய முறைக்கான ஆதரவு "மிகவும் சிறப்பாக" இருப்பதாக அவர் கூறினார்.

"ITR-1, 2, 3, 4 படிவங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, 88% பேர் புதிய வரி முறைக்கு மாறியுள்ளனர்" என்று அகர்வால் PTI-யிடம் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பழைய விருப்பத்தை நீக்கி மாற்றத்தைக் கட்டாயப்படுத்தும் அவசரம் அரசுக்கு இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
புதிய வருமான வரிச்சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலாகவிருக்கும் நிலையில், பழைய முறைக்கு காலக்கெடுவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய அறிவிப்பு இல்லை. இதற்கான காரணம் தரவுகளிலேயே வெளிப்படுகிறது.
பட்ஜெட் 2025 சமயத்தில், 72%-75% வரி செலுத்துவோர் புதிய முறைக்கு மாறியிருந்தனர். கடந்த ஓராண்டில், ரூ.12.75 லட்சம் வரை வரி விலக்கு போன்ற சலுகைகளால் மேலும் லட்சக்கணக்கானவர்கள் புதிய முறையை தேர்வு செய்துள்ளனர்.
புதிய சட்டம் அமல்படுத்தும் முன், CBDT புதிய வருமான வரி படிவங்கள், விதிகள், விரிவான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQs) விரைவில் வெளியிடும். "பிப்ரவரிக்குள் படிவங்களையும் விதிகளையும் வெளியிட்டு, புதிய வருமான வரிச் சட்டம் 2025 அமலுக்கு வரும் முன் கலந்தாய்வுக்கு விடுவோம்" என்று அகர்வால் PTI-யிடம் தெரிவித்தார். இம்மாற்றத்திற்கு தெளிவான தகவல்தொடர்பு அவசியம் என்றார்.
சட்டம் நடைமுறைக்கு வந்த பின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கேள்விகள் அதிகரிக்கும் என எதிர்பார்த்து, CBDT, வரி செலுத்துவோர் மற்றும் அதிகாரிகளுக்காக விளக்கக்காட்சிகள், விளக்கமளிக்கும் FAQs-களைத் தயாரித்து வருகிறது. இவை புதிய முறையின் ஆரம்ப மாதங்களில் குழப்பத்தை குறைக்கும் என்றார் அகர்வால்.
வருமான வரி அடுக்கு முறையில் மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டாலும், பட்ஜெட் 2026 பல வரி செலுத்துவோர் சார்ந்த நடவடிக்கைகளை அறிவித்தது. இதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ITR படிவங்கள், பிரித்து தாக்கல் செய்யப்படும் காலக்கெடு, இணக்க விதிகள் பகுப்பாய்வு ஆகியவை அடங்கும். தற்போது, பத்து பேரில் ஒன்பது பேர் புதிய முறைக்கு மாறியுள்ள நிலையில், அரசு பழைய வரி முறையை வரி செலுத்துவோரே படிப்படியாக கைவிட்டு விடுவார்கள் என அரசு எதிர்ப்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications