இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) தலைவராக டாக்டர் எஸ்.சோமநாத் பதவி விலகுவதை தொடர்ந்து, புதிய சேர்மன் ஆக டாக்டர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த நாராயணன், 1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்து, அதன் முக்கிய துறைகளில் ஒன்றான ராக்கெட் ப்ராபல்ஷன் பிரிவின் தலைவராக 2018 முதல் இருந்து வருகிறார். மத்திய அரசின் அமைச்சரவையின் நியமனக் குழுவின் அறிவிப்பின் படி, நாராயணன் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் சேர்மன் ஆகவும் விண்வெளி ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்பார்.

இந்தி நிலையில் இன்று தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்த நாராயணன், புதிய இஸ்ரோ தலைவர் பதவி "மிகுந்த பொறுப்பு" மற்றும் "பல தசாப்தங்களாக இஸ்ரோ-வை வழிநடத்திய தலைவர்களின் பாதையில் பின்பற்ற ஒரு சிறந்த வாய்ப்பு" என்று விவரித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு இஸ்ரோ பல முக்கியமான பணிகளைச் செய்ய வேண்டிய இருப்பதால், மிகவும் பிஸியாக இருக்கும் காலகட்டம் இது, எனவே நாராயணன் தனக்கு ஓய்வெடுக்க எந்த நேரமும் இல்லை என்பது நன்றாகத் தெரியும் என்றும் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த வருடம் ஜனவரி இறுதியில் ஜி.எஸ்.எல்.வி Mk-II/IRNSS-1 K திட்டம் உள்ளது. நாங்கள் ககன்யான் திட்டத்தின் முதல் விண்வெளி விமானமான ஜி-1 திட்டத்தையும், LVM3 ஏவு வாகனத்தை வணிக ரீதியாக பயன்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம் என்று நாராயணன் கூறியுள்ளார்.
இதேவேளையில் இஸ்ரோ-வின் மிக முக்கிய மைல்கல் திட்டமாகச் சந்திரயான்-4 சந்திர பயணம், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அண்டரீக்ஷா நிலையம் (space station), செவ்வாய்க் கிரகத்திற்கான இரண்டாவது பயணம் மற்றும் முதல் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (VOM) போன்ற 4 உயர்மட்ட திட்டங்கள் உள்ளன.
இவை அனைத்தும் டாக்டர் வி.நாராயணனின் பதவிக்காலத்தில் நடந்து முடிக்கப்படாவிட்டாலும், இத்திட்டங்களுக்கான முக்கிய பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவதும், வேகப்படுத்துவதிலும் இவருடைய பங்கு அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications