நாகர்கோவில்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் விஞ்ஞானி நாராயணன் சொந்த ஊருக்கு வருகை தந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ பெங்களூரில் செயல்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மேல காட்டுவிளை பகுதியை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் இஸ்ரோவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 15ஆம் தேதி பெங்களூரில் முறைப்படி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக நாராயணன் தனது சொந்த ஊருக்கு வருகை தந்திருந்தார். கன்னியாகுமரி அருகே உள்ள சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைபதிக்கு சென்று, தனது நியமன ஆணையை வைத்து சாமி தரிசனம் செய்தார். விஞ்ஞானி நாராயணனுடன் அவரது மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
இதனை அடுத்து தன்னுடைய பெற்றோரின் நினைவிடத்திற்கு சென்ற அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஞ்ஞானி நாராயணன் இஸ்ரோ என்பது மிகப்பெரிய அமைப்பு அதில் திறமையானவர்கள் பலர் இருக்கின்றனர், அவர்களில் எனக்கு தலைமை பொறுப்பினை தந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என கூறினார்.
இஸ்ரோவில் அனைவரும் கூட்டாக இணைந்து பணிபுரிவோம் என கூறிய அவர், தனிநபர்களுக்கு மேலே இஸ்ரோ அமைப்பையும் , நாட்டையும் தான் நாங்கள் முக்கியமானதாக கருதுகிறோம் என தெரிவித்தார். தன்னுடைய படிப்புக்காக தன் பெற்றோர் கடினமாக உழைத்தனர் என நினைவுகூர்ந்த அவர் மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறினார்.
உலகிலேயே 6 நாடுகளில் தான் வேகமாக செல்ல கூடிய கிரையோஜினிக் இன்ஜின் உள்ளது, அதில் இந்தியாவும் ஒரு நாடு என பெருமிதம் தெரிவித்த அவர், நம் நாட்டில் கிரையோஜினிக் இன்ஜின் செல்லும் வேகம் 37,000 கிமீ என்றார்.
இந்தியாவிற்கென விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்கும் பணி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். 30,000 கிலோ எடையை சுமந்து செல்லும் அளவிற்கு திறன் படைத்த ராக்கெட் தயாரிப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருவதாக கூறினார்.
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்த மூவருமே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக இருந்த மாதவன் நாயர், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே திருநந்திக்கரையைச் சேர்ந்தவர்.
2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக இருந்த சிவன், நாகர்கோவில் அருகே சரக்கல்விளையைச் சேர்ந்தவர். இவரும் அரசுப் பள்ளியில் பயின்றவர்தான். தற்போது இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்.


Click it and Unblock the Notifications