இந்தியாவில் தற்போது 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இதில் முதன்மையாக இருப்பது கோயம்புத்தூர். ஒருபக்கம் மெட்ரோ நகரங்களுக்கு ஹைதராபாத் பெரும் போட்டியை கொடுத்து வரும் வேளையில், சிறு நகரங்கள் குழுவில் கோயம்புத்தூர் முக்கியமானதாக உள்ளது.
உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக டெக் சேவை நிறுவனங்கள் அதிகளவில் கோயம்புத்தூரில் புது அலுவலகங்களை அமைத்து வருகிறது, இல்லையெனில் ஏற்கனவே துவங்கப்பட்ட அலுவலகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதனால் கோயம்புத்தூரில் தற்போது அலுவலக இடத்திற்கான டிமாண்ட் அதிகளவில் உள்ளது.

இந்த நிலையில் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அருகே நீலம்பூரில் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட், ஸ்ரீ சக்தி டெக்நியூ பார்க் என்ற புதிய ஐடி பார்க்கை உருவாக்கி வருகிறது. சுமார் 3.68 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) பெற அனுமதிக்காக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த டெக் பார்க் 2 பேஸ்மென்ட் + கிரவுண்ட் + 7 மாடிகள் கொண்ட கட்டிடமாக அமைய உள்ளது.
இந்த ஐடி பார்க் AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் டிஜிட்டல் சேவைகளை மையமாகக் கொண்டு இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த டெக் பார்க் 2 டிவர்கள் உடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் சுமார் ரூ.150 கோடி முதலீட்டில் உருவாகி வருவதாகவும். கட்டுமான பணிகள் முடிந்தவுடன் சுமார் 2,000 ஐடி நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு 4.4 கி.மீ தொலைவில் உள்ள நீலம்பூரில் அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெற EIA அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி பெற பலதரப்பட்ட கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம்.
இத்திட்டம் தற்போது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் ஒப்புதல் கிடைத்தால் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படும். இந்த ஐடி பார்க் மூலம் 2000 பேருக்கான வேலைவாய்ப்பையும், நீண்ட கால முதலீட்டு, வர்த்தக வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications