இந்தியாவில் நாளுக்கு நாள் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரங்களில் வசிப்போர் அதிகமாக கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டுகளில் நாம் பணத்தை முன்கூட்டியே எடுத்து செலவு செய்து கொண்டு பின்னர் செலுத்தலாம்.
வங்கிகள் சார்பாக ஒரு மாதத்திற்கு இவ்வளவு தொகை செலுத்தலாம் என வரம்பு நிர்ணயம் செய்து கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட வரம்பிற்குள் நாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கொண்டு அடுத்த மாதம் அதனை திரும்ப செலுத்த வேண்டி இருக்கும். இந்த கிரெடிட் கார்டு பேமெண்ட்களில் தான் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு கடனை உரிய தேதியில் திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் அது குறித்து நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதிகளின் படி , கட்டணம் செலுத்த வேண்டிய தேதிக்கு பின்னரும் உங்களுக்கு இனி 3 நாட்கள் கூடுதல் அவகாசம் என்பது கிடைக்கும். இந்த 3 நாட்கள் அவகாச காலத்தில் வங்கிகளுக்கு உங்களுக்கு எந்த அபராதமும் விதிக்காது.
சில சமயங்களில் கடனை திரும்ப செலுத்தும் தேதியை தவறவிட்டால் அடுத்த நாளே செலுத்தினாலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதற்கு நிவாரணம் கிடைத்துள்ளது. அதாவது கட்டணம் செலுத்தும் தேதியை தவறவிட்டாலும் அடுத்த 3 நாட்கள் அவகாசம் கிடைக்கும். அதற்குள் தாமத கட்டணம் அபராதம் ஏதும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பில்லை செலுத்தலாம்.
உதாரணமாக நீங்கள் கிரெடிட் கார்டு பில்லை செலுத்த மே 1ஆம் தேதி தான் கடைசி தேதி என்றால், அதனை நீங்கள் தவறவிட்டாலும் மே 4ஆம் தேதி வரை எந்த அபராதமும் தாமத கட்டணமும் இல்லாமல் பில்லை செலுத்தலாம்.
ஒருவேளை இதனையும் தவறவிட்டவர்களுக்கு முழு கட்டணத் தொகைக்கும் அல்லாமல், செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைக்கு மட்டுமே தாமத கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த புதிய கிரெடிட் கார்டு விதிகள் 2027 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். 3 நாட்கள் அவகாசம் என்பது அபராதம் மற்றும் கடன் தகுதி பாதிப்பில் இருந்து மட்டுமே வாடிக்கையாளர்களை காக்கும். கடைசி தேதிக்கு அடுத்த நாள் முதல் நிலுவைத் தொகைக்கு வழக்கமான வட்டி கணக்கிடப்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் நிதி ஒழுக்கத்தை பேணி முடிந்த அளவு கடைசி தேதிக்கு முன்னதாகவே தங்களுடைய கடன் தொகையை திரும்ப செலுத்த முயற்சி செய்ய வேண்டும்.
இந்த மாற்றத்திற்கு ஏற்ற வகையில் வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு வழங்கக்கூடிய நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருள் மற்றும் கட்டமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications

