ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் ஒரு புதிய திருப்பமாக, அதானி குழுமத்தின் முன்னாள் ஒப்பந்ததாரர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அதானி விவகாரத்தில் முக்கியமான விபரத்தை பகிர வேண்டும் என மனுக் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே அதானி குழுமத்தின் செயல்பாடுகள், நிதி பரிமாற்றங்கள், பங்குஇருப்புகள் குறித்து செபி ஆய்வு செய்து சுப்ரீம் கோர்டடில் முக்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் விசாரணை அடுத்த சில நாட்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் புதிய திருப்பமாக புதிய மனு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

அதானி குழுமத்தின் சர்குஜா ரயில் பாதை திட்டத்திற்கான மின் ஒப்பந்ததாரராக இருந்த இபிபிஎல் வென்ச்சர்ஸின் இயக்குனர் அஜய் குமார் அகர்வால், செபி-அதானி விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கோரிக்கை மனுவை செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார்.
அஜய் குமார் அகர்வால் தனது மனுவில், அதானி குழுமத்தின் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரராக பணிபுரிந்ததால் அக்குழுமத்தின் பணியை உன்னிப்பாகக் கவனித்துள்ளதாகவும், இதனால் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் interested party ஆக இணைந்துக்கொள்ளவும், முதலீட்டாளர்களின் நலன் காக்கவும் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த மனுவில் கூறினார்.
அஜய் குமார் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த மனுவில், அதானி குழுமத்துடனான தனது பணியின் போது பணம் செலுத்துவதற்காக ஒரு துணை நிறுவனத்தில் இருந்து மற்றொரு துணை நிறுவனத்திற்கு பணம் மாற்றப்பட்டதை அவர் நேரில் பார்த்துள்ளாதாக தெரிவித்தார்.
சர்குஜா ரயில் பாதையின் பணிகளை முடிக்க அதானி குழுமம் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை துவங்கியது, இந்த நிறுவனத்தின் பெயர் சர்குஜா ரயில் காரிடார் பிரைவேட் லிமிடெட் (SRCPL). சத்தீஸ்கரில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான EPC ஒப்பந்தத்தை SRCPL நிறுவனம் துவங்கியது. சர்குஜா ரயில் பாதையின் எலக்ட்ரிக்கல் வேலை செய்ய SRCPL நிறுவனம் EBPL வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு துணை ஒப்பந்தமாக அளிக்கப்பட்டது.
இதன் மூலம் எஸ்ஆர்சிபிஎல் நிறுவனத்திற்காக அஜய் குமார் அகர்வால்-ன் EBPL வென்ச்சர்ஸ் எலக்ட்ரிக் பணிகளை மேற்கொண்ட போது அதானி குழுமத்துடன் நெருங்கி பணியாற்றியுள்ளார். 2022 ஆம் ஆண்டு SRCPL நிறுவனத்தை அதானி போர்ட்ஸ் கைப்பற்றி ரயில்வே துறை சார்ந்த வர்த்தகத்தை Adani Tracks Management Services Pvt Ltd கீழ் கொண்டு வந்தது.

அதானி போர்ட்ஸ் நிறுவனத்துடன் சர்குஜா ரயில் காரிடார் பிரைவேட் லிமிடெட் இணைக்கும் போது SRCPL நிறுவனம் 450 கோடி ரூபாய் அல்லது மொத்த நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் லாபத்தில் 5 சதவீதம் முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தாக்கல் செய்த புதிய விசாரணை அறிக்கையை செப்டம்பர் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பரிசீலிக்க உள்ளதாக தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் செபி சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கைகளை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications