அமெரிக்காவில் என்ன நடந்தாலும் அது உலகையே புரட்டிப் போட்டுவிடும். அது நல்லதாக இருந்தாலும் சரி.. கெட்டதாக இருந்தாலும் சரி. ஏனெனில் அமெரிக்கா தான் இருப்பதிலேயே பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கிறது. வர்த்தகம் தொடங்கி அனைத்திலும் டாலர் தான் முதன்மை வகிக்கிறது. அப்படி இருக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் உடனே உலக நாடுகள் அந்த அறிவிப்பின் பக்கம் திரும்பிவிடும். தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு 10% முதல் 12.5% புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கனடா, மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியம், தைய்வான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வரும் பொருட்களுக்கு வெறும் 10 சதவீத வரி மட்டும் தான் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இனி 12.5% வரி விதிக்கப்படுமாம். ஏன் அமெரிக்கா இந்த முடிவை எடுத்திருக்கிறது? என்ற விவரங்களை பார்ப்போம்.
உலகெங்கிலும் உள்ள 60 நாடுகள் தங்கள் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கி அவர்களுடைய செலவை குறைத்துக் கொண்டு, மிகவும் குறைந்த விலைக்கு பொருட்களை அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறைந்த கூலியில் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது அமெரிக்காவிற்குள் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான தேவை குறைந்துவிடும். அங்கு நல்ல சம்பளம் கொடுத்து தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களால் பிற நாடுகளின் விலையோடு போட்டி போட முடியவில்லை. இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பும், வியாபாரமும் கடுமையாக பாதித்தது. இதை தடுக்கவே இந்த வரி விதிப்பு.

இது குறித்து பேசிய அமெரிக்க வர்த்தக தூதரான ஜெமீசன் கிரியர், அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் சில வர்த்தக நாடுகள் கட்டாயப்படுத்தி உழைப்பை வாங்கிக் கொண்டு பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இது ஏற்றுக் கொள்ள முடியாததாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிட முடியாத களத்தில் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே சில நாடுகள் இதைத் தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உலகளவில் அனைத்து நாடுகளும் பின்பற்றுவதற்காகவே இந்த வரி விதிப்பு என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் டொனால்ட் டிரம்ப் பல நாடுகள் மீது அதிரடியாக வரிகளை விதித்தார். ஆனால் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டு டிரம்ப் விதித்த வரி செல்லாது என அறிவித்தது. பொதுவாக ஒரு நாடு வரி விதித்தால் பதிலுக்கு மற்ற நாடுகளும் வரி விதிக்கும். ஆனால் இந்த முறை 12.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டாலும், அமெரிக்காவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சில நாடுகள் அமைதி காத்து வருகின்றன. இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஜூலை 6ஆம் தேதிக்குள் புதிய வரி விதிப்பு குறித்த தகவல்கள் அதிகாரிகளை சென்றடைய வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வரி விதிப்பு முறை இந்தியாவிற்கு ஒரு சில பிரச்சினைகளை கண்டிப்பாக ஏற்படுத்தும். ஏற்கனவே குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்போது அங்கு உள்ள விற்பனையாளர்கள் அதை ஈடுகட்ட வாடிக்கையாளர்களின் மீது வைப்பார்கள். இதனால் இந்தியாவின் பொருட்கள் அமெரிக்காவில் அதிகரிக்கும். அப்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் விலை உயர்வாக இருந்தால், மக்கள் அவற்றை வாங்க தயங்குவார்கள். இது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. இனி வரும் காலங்களில் ஏற்றுமதியில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications