புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டத் துவங்கியுள்ள வேளையில் வெளியூர்களுக்கும், நியூ இயர் பார்ட்டிக்கும் புக்கிங் அனல் பறக்கத் துவங்கியுள்ளது. பொதுவாக வீக்என்ட் உடன் ஒரு நாள் சேர்ந்தார் போல் லீவு வந்தால் பஸ் கட்டணம், விமானக் கட்டணம், ஹோட்டல் புக்கிங் ஆகியவை தாறுமாறாக அதிகரித்து விடும்.
இப்போ புத்தாண்டு கொண்டாட்டம் கேட்கவா வேணும், மொத்த இந்தியாவிலும் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதிலும் ஒரு ஹோட்டலில் ஒரு நாள் இரவுக்கு 7 லட்சம் ரூபாய் வரையில் கட்டணம் வசூலிப்பது நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள சில பிராண்டட் ஹோட்டல்களில் டிசம்பர் 31 ஆம் தேதி ரூம் கட்டணங்கள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது ஹோட்டல் துறையினருக்கு அற்புதமான காலமாகப் பார்க்கப்பட்டாலும் மக்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்தக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்குச் சுற்றுலா சென்ற அனைவரும் ஹோட்டல், உணவு, பயணம் என அனைத்திலும் அதிகப்படியான கட்டணத்தைச் செலவு செய்துள்ளனர். ஆசைப்பட்டுச் சென்ற டிரிப் தற்போது அதிகப்படியான செலவுகள் காரணமாகப் புலம்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் & ரிசார்ட்ஸ் அறை வாடகை அதிகபட்ச அளவை எட்டியுள்ளது என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். லீலா பேலஸ் உதய்பூர், டிசம்பர் 31க்குத் தற்போது அறைகள் இல்லாததால், ஆனால் Booking.com தளத்தில் முன்பு கிறிஸ்மஸ் அன்று இரவு தங்குவதற்குச் சுமார் ₹1,06,200 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாரா (Six Senses Fort Barwara) டிசம்பர் 31 க்கு ₹1,20,000 வசூலிக்கிறது என்று அதன் வணிக இயக்குநர் ரஜத் கெரா தெரிவித்தார். இதேபோல் இந்த ஹோட்டலில் இருக்கும் ஒரு இரவுக்கு ₹7 லட்சம் கட்டணம் கொண்ட மஹாராஜா சூட் கேட்டு பல கோரிக்கைகள் வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டுப் பயணிகள் தாமதமாக முன்பதிவு செய்வது, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது போன்ற விஷயங்களால் கட்டணங்கள் உயர வழிவகுத்துள்ளது. இதேவேளையில் முன்கூட்டியே திட்டமிடாதவர்கள் அதிகக் கட்டணம் செலுத்தத் தயாராக உள்ளனர் என்றும் ரஜத் கெரா தெரிவித்தார்.
உதாரணமாகக் கோவாவை எடுத்துக்கொள்வோம், 2 பேர் எவ்விதமான சமரசம் இல்லாமல் ஜூன் மாதத்தில் கோவா சென்றால் 30000 முதல் 40000 ரூபாய் போதுமானது. இதுவே செப்டம்பர் அக்டோபர் மாதம் சென்றால் 60000 ரூபாய், அதே டிசம்பர் மாதம் துவக்கத்தில் சென்றால் 70000 முதல் 75000 ரூபாய், கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர்-க்கு சென்றால் குறைந்தது 1 லட்சம்.
இதுவே 5 ஸ்டார் ஹோட்டல், ஆடம்பர வாடகை கார், பெரிய ஹோட்டலில் நியூ இயர் பார்ட்டி எனச் சென்றால் குறைந்தது 3 லட்சம் செலவாகும். இதேபோல் காசு பிரச்சனையில், Vibe தான் முக்கியம் என நினைத்தால் இந்தியா முழுக்க எங்குச் செல்ல வேண்டுமானாலும் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் தான் பெஸ்ட்டான டைம்.


Click it and Unblock the Notifications