மனிதர்களுக்கே உரிய உணர்வுகளோடு கலந்துரையாடக் கூடிய திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆர்யா என பெயர் சூட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் தற்போது சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ரியல்பாட்டிக்ஸ் என்ற நிறுவனம் ஆர்யா என்ற ஒரு மனித வடிவிலான ரோபோவை அறிமுகம் செய்துள்ளது.

"MEET ARIA - THE FEMALE COMPANION ROBOT," என அந்த நிறுவனம் ஆர்யாவின் சிறப்பம்சங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பெண் வடிவிலான ஆர்யா ரோபோவின் விலை 1. 5 கோடி ரூபாய் ஆகும். இந்த ரோபோவானது மனிதர்களைப் போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துமாம்.

இதுவரை வந்த ரோபோக்களில் இருந்து மாறி வித்தியாசமாக இருக்க வேண்டும், மனிதர்களுக்கே உரிய சிறப்பம்சங்கள் அனைத்தும் இருக்க வேண்டும் ,ஒரு சமூகமாக ஒருங்கிணைந்து வாழும்போது எப்படி சூழல்களை கையாள வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்தையும் உள்ளீடு செய்து இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது என இந்த நிறுவனம் கூறுகிறது.

குறிப்பாக தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரு துணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தங்களுடைய நிறுவனம் இத்தகைய மனித வடிவிலான ரோபோக்களை உருவாக்குகிறது என இந்த நிறுவனம் கூறுகிறது. ஆர்யா ரோபோ மனிதர்களைப் போலவே வாயசைத்து பேச வேண்டும் கண்களை அசைக்க வேண்டும் என்பதற்காக பிரத்தியேகமாக அதன் கழுத்தில் மட்டும் 17 வகையான மோட்டர்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக இந்த நிறுவனம் கூறுகிறது.
இதனை வாங்கி பயன்படுத்தக்கூடிய நபர்கள் ஆர்யாவின் முகம் ஹேர் ஸ்டைல் நிறம் உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளலாம். இந்த ரோபோவானது சூழல்களுக்கு ஏற்ப முகபாவனைகளையும் தன்னுடைய நடத்தையையும் மாற்றிக் கொள்ளுமாம். எதிர்காலத்தில் மனிதர்கள் பலரும் இது போன்ற ரோபோ துணையுடன் தான் இருப்பார்கள் என்கிறது இந்நிறுவனம்.

இதுதான் எதிர்கால தொழில்நுட்பமாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பலரும் ஆர்யா ரோபோவை பாராட்டி பதிவு செய்துள்ளனர் . ஆரிய ரோபோவை பொருத்தவரை தலையிலிருந்து நெஞ்சு பகுதி வரை மட்டும் வாங்க வேண்டும் என விரும்புபவர்கள் 10000 அமெரிக்க டாலர்களை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். முழுமையாக நிற்கக்கூடிய ஒரு பெரிய மாடல் வாங்க வேண்டும் என விரும்புபவர்கள் 1. 75 லட்சம் டாலர்களை செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த ஆர்யா ரோபோ உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அப்போது ஆர்யா ரோபோ எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய ஆப்டிமஸ் ரோபோவை சந்திக்க நான் விரும்புகிறேன் என கூறியதாக தெரிகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications