பெங்களூரு: சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் வேயுடன் கோலார் பெங்களூரு நெடுஞ்சாலையை இணைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக கர்நாடகாவின் எல்லைக்குட்பட்ட பகுதியில் கூடுதலாக 18 கிலோமீட்டர் நீளத்திற்கு இணைப்பு சாலை கட்டமைக்கப்பட வேண்டி இருக்கும்.
ஆந்திரா மாநில எல்லைப் பகுதிகள் மற்றும் சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இந்த இணைப்பு சாலையின் மூலம் பயன்பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. அண்மையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பெங்களூரு சென்னை இடையிலான எக்ஸ்பிரஸ் வேயில் கர்நாடகா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 68 கிலோமீட்டர் நீளமுடைய எக்ஸ்பிரஸ்வேயை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

தற்போதைக்கு இந்த பெங்களூர் மற்றும் சென்னை இடையிலான எக்ஸ்பிரஸ் வே தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் வழியே செல்கிறது. கர்நாடக பகுதியில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. ஆந்திர மற்றும் தமிழ்நாட்டு பகுதியில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் குறிப்பிட்ட பகுதிகளில் எக்ஸ்பிரஸ் வே மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதைக்கு வாகன ஓட்டிகள் எந்தவித சுங்க கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தி வருகின்றனர். கட்டுமான பணிகள் முடிந்து எக்ஸ்பிரஸ்வே முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் போது தான் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என சொல்லப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் வேயுடன் பெங்களூர் மற்றும் கோலார் நெடுஞ்சாலையை இணைப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு கர்நாடக பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் வேயில் ஒரு நாளைக்கு 2000 வாகனங்கள் வரை செல்கின்றன. படிப்படியாக இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. கோலார் பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் சாலையை மேம்படுத்துவது தொடர்பாக கோலார் மாவட்ட பொறியியல் அதிகாரிகளிடம் கருத்து கேட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக எக்ஸ்பிரஸ்வேக்களில் இருசக்கர வாகனங்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டிராக்டர்கள் செல்வதற்கு நாடு முழுவதுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எக்ஸ்பிரஸ் வே பயன்பாட்டுக்கு வரும்போது எந்த பகுதியிலும் இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொள்ளும்படி அந்தந்த உள்ளாட்சி துறையினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ்வேக்களில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் சில இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகளை மீறி எக்ஸ்பிரஸ்வேயில் நுழைவதாக தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications