சென்னை: இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை, இலவசமாகவே பயணம் செய்து கொள்ள முடியும். ஆனால் வரும் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து இந்த விதிமுறை மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமான NHAI விளக்கம் தந்துள்ளது.
பைக்குகளுக்கு இலவசம்: ஜூலை 15ஆம் தேதியிலிருந்து சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தியாவில் நெடுஞ்சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனங்கள் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து அதற்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்க கட்டணங்களை வசூல் செய்கின்றன. இந்தியாவில் கார் மற்றும் பேருந்து, கனரக வாகனங்களிடம் இருந்து சுங்க கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன.

அரசு விளக்கம்: நாடு முழுவதும் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இலவசமாக சென்று கொள்ளலாம் அவர்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவது கிடையாது. ஆனால் வரும் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து இது மாற்றப்படுவதாக தகவல்கள் பரவின. ஆனால் இது உண்மை இல்லை என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் தந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இரு சக்கர வாகனங்களும் இனி சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை உண்மை இல்லை என கூறியுள்ளது. அரசுக்கு தற்போது அது போன்ற எந்த ஒரு பரிந்துரையும் இல்லை இரு சக்கர வாகனங்கள் வழக்கம் போல இலவசமாகவே சுங்கச்சாவடிகளை கடக்கலாம் என தெரிவித்துள்ளது.
சாமானியர்கள் நிம்மதி: இருசக்கர வாகனங்களும் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை வந்தால் லட்சக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் . குறிப்பாக அன்றாடம் வேலைக்காக சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். சுங்க கட்டணத்திற்காக இனி மாதம்தோறும் தங்கள் பட்ஜெட்டில் கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டி இருக்கும். ஆனால் சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இந்த விளக்கம் அமைந்துள்ளது.
கார் உரிமையாளர்களுக்கு சலுகை: அண்மையில் தான் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஆண்டுக்கான டோல் பாஸ் திட்டத்தை கொண்டு வந்தது . இதன் மூலம் தனியார் கார் உரிமையாளர்கள் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஆண்டுக்கான டோல் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் . இந்த பாஸை கொண்டு ஓராண்டு முழுவதும் கூடுதலாக எந்த கட்டணமும் செலுத்தாமல் சுங்க சாவடிகளை கடந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications