சென்னை: தமிழ்நாட்டில் நான்கு சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக புகார்கள் எழுந்ததை எடுத்து அங்கே ஜிஐஎஸ் (Geographic Information System (GIS) ) அடிப்படையிலான நிகழ்வு நேர கண்காணிப்பை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை பைபாஸ் சாலையில் உள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் , கிருஷ்ணகிரி - ஓசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி , கிருஷ்ணகிரி - வாலாஜாபேட்டை பிரிவில் அமைந்துள்ள வாணியம்பாடி சுங்கச்சாவடி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளிலும் Geographic Information System (GIS) அடிப்படையிலான நிகழ் நேர கண்காணிப்பை மேற்கொள்ள இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் இயங்கும் ,இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் இதற்கான மென்பொருளை உருவாக்கியுள்ளது.

பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் மற்றும் பீக் அவர்களில் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உண்டாகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு புகார்கள் சென்றுள்ளன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகவே இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் சார்பாக Geographic Information System (GIS)அடிப்படையிலான ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் சுங்கச்சாவடிகளில் ஏன் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இருக்கிறது, இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காணலாம் என்பதற்கு தேவையான தகவல்களை வழங்கும். பொதுவாக சுங்கச்சாவடியில் ஒரு வாகனம் 10 நொடிகளுக்கு மேல் நிற்கக்கூடாது என்பதுதான் விதிமுறையாக இருந்தது.
ஆனால் கடந்த செப்டம்பரில் தான் அந்த விதிமுறை நீக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ் நேர கண்காணிப்பு கருவி வாயிலாக குறிப்பிட்ட சுங்கச்சாவடியில் நீண்ட நேரத்திற்கு வாகனங்கள் நிற்கும்போது குறிப்பிட்ட ஒரு வழியிலேயே வாகனங்கள் செல்லாமல் அனைத்து வழிகளிலும் பிரித்து அனுப்பி வைக்கும் படி சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி மேலாளர்களுக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என சொல்லப்ப்டுகிறது.
எவ்வளவு மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் நிற்கின்றன ,எந்த வேகத்தில் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன என அனைத்து தகவல்களுமே இந்த மென்பொருள் மூலம் கிடைத்து விடுமாம். இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. ஒரு நாளில் எந்த நேரத்தில் அதிக வாகனங்கள் வருகை தருகின்றன, அடுத்த நாளில் எப்படி அதனை சரி செய்யலாம் என்பதற்கான உள்ளீடுகளை இது வழங்கும். நாடு முழுவதும் 100 சுங்கச்சாவடிகளில் இந்த மென்பொருள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications