டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மோடி 3.0 அரசின் முதல் முழு நீள பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் ஊரக மேம்பாட்டிற்காக மொத்தமாக 2.66 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார்.
மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஊரக நுகர்வினை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

குறிப்பாக கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்காக 2.66 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த புதிய அறிவிப்புகளோடு பிரதமர் அன்ன யோஜனா தற்போது ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் இதனால் சுமார் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார் .
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்றும் இதற்கு தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பிரதமர் ஜன் ஜாதியா உன்னாத் கிராம் அபியான் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார சூழல்களை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் ஜன் ஜாதியா உன்னாத் கிராம் அபியான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் 63 ஆயிரம் கிராமங்கள் மற்றும் 5 கோடி பழங்குடியின மக்கள் பயனடைய உள்ளனர். இந்த முன் முயற்சி பழங்குடி பெரும்பான்மை கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பழங்குடி குடும்பங்களுக்கு சமூக மற்றும் பொருளாதார ரீதியான மேம்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் சதக் யோஜனாவின் நான்காம் கட்டத்தையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பு என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டம் இது. இதன் நான்காம் கட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக தகுதி பெற்ற 25 ஆயிரம் குடியிருப்புகள் கொண்ட கிராமப்புறங்களுக்கு சாலை இணைப்பை வழங்கும்.
ஊரக நில நிர்வாகத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுந்த நிதி உதவியுடன் திட்டமிடல் மற்றும் மேலாண்மை ஊக்குவிக்கப்படும் என கூறிய நிர்மலா சீதாராமன், இந்த நடவடிக்கைகள் கடன் வழங்கல் மற்றும் பிற விவசாய சேவைகளையும் எளிதாக்கும் என தெரிவித்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications