டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கக்கூடிய 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் புத்தாண்டு பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த கமிஷன் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க உள்ளது. எனவே சம்பள கமிஷன் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசு ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

தற்போது நடைமுறையில் இருக்கும் 7ஆவது சம்பள கமிஷனின் காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதால் 8ஆவது சம்பள கமிஷன் வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த கால நிகழ்வுகளை ஆய்வு செய்யும் போது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
தற்போது தான் அரசு சம்பள கமிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இன்னும் சம்பள கமிஷனுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. பொதுவாக சம்பள கமிஷன் தங்கள் அறிக்கைகளை இறுதி செய்வதற்கு ஒரு வருடத்திற்கு மேலாக எடுத்துக் கொள்ளும். எனவே அடுத்த ஜனவரி மாதம் இந்த பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
இதனிடையே நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி கங்கனா ரனாவத் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சஜ்தா அகமது ஆகியோர் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது சம்பள கமிஷன் குறித்து சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். குறிப்பாக மத்திய அரசு எட்டாவது சம்பள கமிஷன் அறிக்கையை சமர்ப்பணம் செய்வதற்கு ஏதேனும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்திருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மற்றும் பரிந்துரை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என பதில் அளித்தார். மேலும் 8ஆவது சம்பள கமிஷனில் இடம்பெற்றிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேள்விக்கு பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன் தோராயமாக 1.03.2025 நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 36.57 லட்சம் என்றும் 31.12.2024 நிலவரப்படி ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 33.91 லட்சம் என்றும் தெரிவித்தார்.
8ஆவது சம்பள கமிஷனால் ஏற்படும் நிதி தாக்கங்கள் குறித்து அரசு ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டதா அல்லது ஊழியர் சங்கங்களோடு ஆலோசனை நடத்தியதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சகம் , உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் குறிப்பு விதிமுறைகள் குறித்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
எட்டாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் மற்றும் அவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதை பொறுத்து மத்திய அரசுக்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரியவரும் என்றும் அவர் விளக்கம் தந்துள்ளார்.


Click it and Unblock the Notifications