டெல்லி: மத்திய பட்ஜெட் - 2024 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து துறை சார்ந்து வெளியிட்ட அறிவிப்புகள் என்ன என்று பார்ப்போம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2024 மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து புதிய அரசு அமைந்தவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இன்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அனைத்து துறைகள் சார்ந்த அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ரயில்வே துறை மற்றும் விமான போக்குவரத்து சார்ந்து அவர் முக்கிய அறிவிப்புகளை வழங்கினார்.

அவர் தெரிவித்து உள்ளதாவது, "புதிய சாலை, ரயில்வே மற்றும் துறைமுகங்களுக்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும். இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை தரப்படும். 40 ஆயிரம் ரயில்களின் பெட்டிகளின் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும். தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் விதமாக 3 முக்கிய ரயில்வே பெரு வழிதடங்கள் அமைக்கப்படும்.
எரிசக்தி வழித் தடங்கள், கனிம வளம் வழித்தடங்கள், சிமெண்ட் வழித்தடங்கள், துறைமுக இணைப்புக்கான வழித்தடங்கள் மற்றும் அதிக போக்குவரத்து வழித்தடங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, மூன்று முக்கியமான ரயில்வே பொருளாதார வழித்தட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்கள், பிரதமரின் கதி சக்தி திட்டங்களின் கீழ் அடையாளம் காணப்பட்டு, பல மாதிரி இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளன. பல முறை போக்குவரத்து இணைப்புகள் மூலமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயல்திறனை அதிகரிக்கவும் மற்றும் செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நமோ பாரத் ரயில் சேவைகளும் பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்தியாவில் விமான போக்குவரத்து துறையும் பெரு வளர்ச்சியை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகள் 2 ஆம் தர நகரங்கள் மற்றும் 3 ஆம் தர நகரங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்துத் துறை சென்று சேர்ந்து இருக்கிறது. 1000 விமானங்கள் உற்பத்திக்கு இந்திய விமான நிறுவனங்கள் தயாராக உள்ளன." என்றார்.
முன்னதாக, "மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1.2 லட்சம் கோடி மத்திய அரசால் வழங்கப்படும். ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். இந்தியா முழுவதும் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கு தேவையான பேட்டரி சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அடைந்து உள்ள வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வருமான வரி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை." என அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications