மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் வேளையிலும், பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த நிதி பற்றாக்குறை இலக்கை எட்டுவதில் அதிகளவிலான சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பிஎம் இந்தியா இணையதளத்தில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் என மூத்த தலைவர்கள் தன்னார்வ சொத்து அறிவிப்பின் கீழ் வெளியிடப்பட்ட சொத்து விபரங்கள் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

பிஎம் இந்தியா இணையதள விபரங்கள் படி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொத்து விபரங்களைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் வெளியிட்ட நிலையில் மத்திய அரசின் கஜானாவை செழிப்பாக வைத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு குறித்து முழு விபரத்தையும் இப்போது பார்ப்போம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரின் ஜெயநகர் 4வது டி பிளாக் பகுதியில் வசித்து வருகிறார், இதேபோல் டெல்லியில் சஃப்தர்ஜங் சாலையில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். இது இரண்டும் இவரின் சொந்த வீடு இல்லை.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடைய கணவர் பரகால பிரபாகர் இணைந்து ஹைதராபாத் நகரின் அருகில் மஞ்சிரெவுலா என்னும் கிராமத்தில் சுமார் 1.70 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை (50:50) வைத்துள்ளனர். இதோடு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியாக 17.08 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் வைத்துள்ளார்.
மஞ்சிரெவுலா கிராமத்தில் இருக்கும் வீடும், விவசாய நிலமும் தான் நிர்மலா சீதாராமனுக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் மற்ற அனைத்தும் அசையும் சொத்துக்கள் பிரிவில் வருகிறது.
நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள தகவல் படி 28,200 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டர், 14.49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 315 கிராம் தங்க நகைகள், 3.97 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5.282 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கில் 35.52 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வைத்துள்ளார்.
இதேபோக பிபிஎப்-ல் 1.59 லட்சம் ரூபாய், மியூச்சுவல் பண்டில் 5.80 லட்சம் ரூபாய், பணமாக கையில் 7350 ரூபாய், தனிநபராக இவர் கொடுத்த 2.70 லட்சம் ரூபாய், இதர பிரிவுகளில் 5.08 லட்சம் ரூபாய் இவருடைய அசையும் சொத்துக்களாக உள்ளது.
மேலும் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடைய கணவர் பரகால பிரபாகர் இணைந்து கனரா வங்கியில் 5.44 லட்சம் ரூபாய் ஹோம் லோன், அடமான கடனாக 18.93 லட்சம் ரூபாய்க்கும், ஓவர்டிராப்ட் பிரிவில் 2.53 லட்சம் ரூபாய்க் கடன்களை வைத்துள்ளனர்.
பிரதமர், மத்திய அமைச்சர்கள் என மூத்த தலைவர்கள் தன்னார்வ சொத்து அறிவிப்பின் கீழ் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் அவரிடம் எவ்வளவு பணம், சொத்துக்கள் இருக்கிறது என்பது பிஎம் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் படி மத்திய நிதியமைச்சர் சொத்து விபரங்கள் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications