டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவில் நடக்கும் பிரச்சினை குறித்து இன்று காலை ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த பதிவுக்கு தற்போது மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், நாட்டின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் அழிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இன்னும் எத்தனை நாள் சக இந்தியத் தொழிலதிபர்களும், சந்தை வல்லுனர்களும் அமைதியாக இருக்கப்போகிறீர்கள்..?

இந்திய தொழில்துறை பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் விளையாட்டுப் பொருள் இல்லை. டாடா குழுமம் அழிக்கப்பட்டு வருகிறது, ஆனால் எந்தவொரு தொழிலதிபரும் இதற்கு எதிராகத் துணிந்து பேச முன்வரவில்லை எனக் கூறியுள்ளார். இந்த குற்றங்களுக்குக் கட்டாயம் நீதி கிடைக்க நாங்கள் வழி செய்வோம் எனத் தெரிவித்தார் ராகுல் காந்தி.
இந்த கடுமையான பதிவுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் அரசியலாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
வணிகம், சட்டம் சார்ந்த விஷயங்களை எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றவியல் பிரச்சனையாக முத்திரை குத்துவது எந்த காரணத்தைக் கொண்டு ஏற்க முடியாது என நிர்மலா சீதாராமன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது பதிவில் ராகுல் காந்தி இந்தியத் தொழிற்துறை மற்றும் நிறுவனத் தலைவர்களின் வெற்றியைத் தொடர்ந்து குறைத்து மதிப்பீட்டு வருகிறார். நீங்கள் முயல்வது என்ன..? இந்தியாவில் இருக்கும் தொழில்முனைவோர்களை உங்கள் பக்கம் ஈர்த்துக்கொண்டு நாட்டில் அவநம்பிக்கையைப் பரப்பத் திட்டமிடுகிறீர்களா என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி பல வருடங்களாக லைசென்ஸ் - கோட்டா ராஜ் கொள் மூலம் இந்தியத் தொழில் வளர்ச்சியை முடக்கியதும், கோடிக்கணக்கான மக்களை வறுமையில் தள்ளியது. ஆனால் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி இந்திய தொழிற்துறையில் வேலைவாய்ப்பு உருவாக்குவோரையும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்போரையும் மதிக்கிறார்.
எங்கள் அரசின் கொள்கைகள் நாட்டில் தொழிற்துறை உருவாக்கம், வளர்ச்சிக்குச் சாதகமாகவும், முதலீட்டை ஈர்க்கும் வகையிலும் உருவாக்கப்பட்டவை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இறுதியாக உங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபடுவது அவசியம். எனவை எல்லா இடத்திலும் இல்லாத பிரச்சனைகளை (Ghost) இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

