நாட்டில் முன்பெல்லாம் விஜய் மல்லையா என்றால் ஞாபகத்திற்கு வருவது மிகச் சிறந்த தொழிலதிபர் என்றும், கிங்பிஷர் என்ற பிராண்ட் ஓனர் என்றும்தான். அதுவே மதுபிரியர்களுக்கு கிங்பிஷர் பியர் தான் ஞாபகம் இருக்கும். அடுத்தபடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பல்வேறு பிரபல நிறுவனங்களை வைத்து இந்தியாவில் கொடிகட்டி பறந்த இவர் கடல் கடந்து வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். இவரை போலவே வைர வியாபாரி நீரவ் மோடியும், மெகுல் சோக்சி வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ளார். இவர்களை கைது செய்து நாடுகடத்தவும், இவர்களிடமிருந்து பணத்தை திரும்பபெறவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிகளை ஏமாற்றி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர்கள் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடியிடம் இருந்து 15,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் மீட்பு நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று, நாட்டின் பொதுத்துறை வங்கிகள் ரூ.14,131.60 கோடி வசூலித்துள்ளன என்றும், மற்றொரு வைர வியாபாரி நிரவ் மோடியிடம் இருந்து 1,052.58 கோடி ரூபாயும் அதேபோல், மேலும் மெகுல் சோக்ஸியிடம் இருந்து ரூ.2,565.90 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார். சில பெரிய வழக்குகளில் இருந்து அமலாக்க இயக்குனரகம் மொத்தம் ரூ.22,280 கோடியை மீட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார்: தொழிலதிபரும், முன்னாள் எம்பியுமான விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தொடர்பான நிதி முறைகேடு புகார்களுக்கு மத்தியில், 2016ல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். விஜய் மல்லையா ஜனவரி 5, 2019 அன்று தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மல்லையா மீது மோசடி மற்றும் பணமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை நாட்டுக்கு அழைத்து வர இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
14 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்ததாக மெகுல் சோக்சி குற்றச்சாட்டு: மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையில் ரூ.14,000 கோடி மோசடி செய்த வழக்கில் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் மெகுல் சோக்சி மற்றும் நிரவ் மோடி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2011 மற்றும் 2018 க்கு இடையில், வங்கி அதிகாரிகளின் அனுசரணையுடன் போலியான லெட்டர்ஸ் ஆஃப் அண்டர்டேக்கிங்ஸ் (LOU) மூலம் வெளிநாட்டு கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது. தற்போது இருவரும் வெளிநாட்டில் பதுங்கி உள்ளனர்.
2017 இல் ஆன்டிகுவா-பார்புடாவின் குடியுரிமையைப் பெற்றார்: மெஹுல் சோக்சி 2018 ஜனவரியில் வெளிநாட்டிற்கு தலைமறைவானார். அவர் 2017 ஆம் ஆண்டில் ஆன்டிகுவா-பார்புடாவின் குடியுரிமையைப் பெற்றார் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த ஊழலை விசாரித்து வரும் மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம் போன்ற அமைப்புகள் சோக்சியை நாடு கடத்த முயன்று வருகின்றன.


Click it and Unblock the Notifications