மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேசிய சொத்து பணமாக்கல் திட்டம் 2.0 (National Monetisation Pipeline 2.0) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். 2025 ஏப்ரல் முதல் ஐந்து ஆண்டுகளில் (2025-2030) அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை பணமாக்குவதன் மூலம் 16.72 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டுவது தான் இத்திட்டத்தின் இலக்கு.
நிதி ஆயோக் (NITI Aayog) உருவாக்கிய இத்திட்டம் கடந்த ஆண்டு யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'சொத்து பணமாக்கல் திட்டம் 2025-30' அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய திட்டத்தில் ரூ.10 லட்சம் கோடி என்ற இலக்கு இருந்த நிலையில், இப்போது இது ரூ.16.72 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் தனியார் முதலீடு ரூ.5.8 லட்சம் கோடியாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சொத்து பணமாக்கல் திட்டம் 2.0 என்றால் என்ன?
சொத்து பணமாக்கல் திட்டம் என்பது பயன்படுத்தப்படாத அல்லது முழுமையாக பயன்படுத்தப்படாத மத்திய அரசுக்கு சொந்தமான உள்கட்டமைப்பு சொத்துக்களை தற்காலிகமாக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, பணம் ஈட்டும் முறை.
இதில் சொத்து விற்பனை, பங்கு விற்பனை, குத்தகை, பணப்புழக்க பத்திரங்கள் (securitisation), அல்லது ஏலம் போன்ற வழிகளில் இந்த முதலீட்டை திரட்டப்பட உள்ளன. முதல் கட்டம் 2021இல் தொடங்கியது, இப்போது இரண்டாம் கட்டம் 2025-26 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நடைபெறும். இத்திட்டம் அரசின் நிதி பற்றாக்குறையை குறைக்கவும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி திரட்டவும் உதவும்.
ரூ.16.72 லட்சம் கோடி இலக்கு எப்படி எட்டப்படும்?
இந்த இலக்கில் பெரும்பகுதி சாலை, துறைமுகம், ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, சுரங்கம் போன்ற துறைகளில் இருந்து நிதி திரட்டப்படும். குறிப்பாக 21,300 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், 15 மல்டி-மோடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்குகள், 6 ரோப் வேகள் ஆகியவற்றை பணமாக்குவதன் மூலம் ரூ.4.42 லட்சம் கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மின்சாரம் ரூ.2.77 லட்சம் கோடி, துறைமுகங்கள் ரூ.2.64 லட்சம் கோடி, ரயில்வே ரூ.2.62 லட்சம் கோடி, நிலக்கரி ரூ.2.16 லட்சம் கோடி, சுரங்கங்கள் ரூ.1 லட்சம் கோடி, நகர்ப்புற உள்கட்டமைப்பு ரூ.52,000 கோடி, விமான நிலையங்கள் ரூ.27,500 கோடி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ரூ.16,300 கோடி, கிடங்கு மற்றும் சேமிப்பு ரூ.10,000 கோடி, டெலிகாம் ரூ.4,800 கோடி, சுற்றுலா ரூ.1,200 கோடி தொகை மற்ற துறைகளில் இருந்து திரட்டப்பட உள்ளன.
முக்கிய திட்டங்கள்
இத்திட்டத்தில் GAIL Gas நிறுவனத்தில் சிறிய அளவிலான பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடுதல், விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வது, நான்கு கூட்டு முயற்சி விமான நிலையங்களில் பங்கு விற்பனை, முக்கிய துறைமுகங்களின் நிலப்பரப்புகள் மற்றும் உணவு கழகத்தின் நிலங்களை பொது-தனியார் கூட்டுறவு (PPP) மாதிரியில் மேம்படுத்துதல், 94 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுதல், BSNL-இன் 38 நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுதல் போன்றவை அடங்கும்.


Click it and Unblock the Notifications