டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கை மீதுதான் ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் இருக்கிறது. இதில் ரயில்வே துறைக்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு
பொறுப்பேற்றதிலிருந்து ரயில்வே துறையை நவீனமயமாக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் 2025 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் ரயில்வே துறையை நவீனப்படுத்துவது தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக ரயில்வே துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 2024 ஆம் ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரயில்வே துறைக்கு 2,62,200 கோடி ஒதுக்கீடு செய்தார். இது அதற்கு முந்தைய ஆண்டுகளை விட இது அதிகபட்சமாகும். அதேபோலவே வரக்கூடிய பட்ஜெட்டிலும் அரசு ரயில்வே துறைக்கு அதிகபட்ச நிதியை ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிவேக ரயில் திட்டங்களில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மறுக்கட்டமைப்பு செய்வது, வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் கூடுதல் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்குவது, வந்தே பாரத் ரயில்களை அதிக வழித்தடங்களுக்கு விரிவாக்கம் செய்வது, பயணிகளின் சௌகரியங்களை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில்
கவனம் செலுத்தும் என சொல்லப்படுகிறது.
அரசு இந்த பட்ஜெட்டிலும் ரயில்வே துறை மீது அதிக கவனம் செலுத்தும் என்பதை எதிர்பார்க்கலாம் என கேபிஎம்ஜி அமைப்பின் நிலாச்சல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை அதிகம் எதிர்பார்க்கலாம் என டிட்டாகர் ரயில்வே நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார்.
குறிப்பாக சரக்கு போக்குவரத்து பிரிவில் அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடும் என கூறுகிறார். சரக்கு ரயில்கள் இயக்கத்திற்காக பிரத்தியேக காரிடார்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சரக்கு போக்குவரத்தில் 40 சதவீதம் ரயில்கள் மூலம் நடைபெறுவதை உறுதி செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ரயில்வே துறையை பொறுத்தவரை அரசு சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை அதன் இயக்கத்திற்காகவே செலவிடுகிறது. அதாவது 100 ரூபாய் வருமானமாக ஈட்டினால் அதில் 98 . 22 ரூபாய் இரயில் இயக்குவதற்கான செலவினங்களுக்கே பயன்படுகிறது. இதனால் ரயில்வே துறை மூலம் அரசுக்கு கிடைக்க கூடிய லாபம் மிக மிக குறைவாக இருக்கிறது. இதனை மேம்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பயணிகள் கட்டணத்தை மாற்றி அமைப்பது, மனிதர்களை குறைத்து தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்துவது, பொருளாதார ரீதியாக லாபம் தரக்கூடிய ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் தருவது , ரயில்வே திட்டங்களில் அரசு மற்றும் தனியார் இணைந்து மேற்கொள்ளக்கூடிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications