ஜப்பானின் இரண்டு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான் மற்றும் ஹோண்டா தனது வர்த்தகத்தையும், உற்பத்தி தளங்களையும் இணைக்கும் பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளன. டிசம்பர் 2024ல், அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என இரு தரப்பும் தனது பேச்சுவார்த்தையை துவங்கியது. ஆனால் தற்போது பேச்சுவார்த்தையை நிறுத்தவும், இணைப்பு குறித்த திட்டங்களையும் முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
நிசான் மற்றும் ஹோண்டா இணைந்தால் உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளராக உருவாகியிருக்கும். ஆனால் ஆரம்பம் முதல் ஜப்பான் நிறுவனங்கள் இணையாது என்ற கருத்து தொடர்ந்து இருந்து வந்தது, இது நிரூபணமாகியுள்ளது.

உலகளவில் அதிகரித்து வரும் சீன மின்சார வாகனங்களின் ஆதிக்கத்தை உடைக்கவும், குறிப்பாக BYD நிறுவனத்திற்கு இணையாக தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி வலிமையை கொண்டிருக்க நிசான் மற்றும் ஹோண்டா இணைப்பு பெரிய அளவில் பலன் அளிக்கும் என கூறப்பட்டது.
நிசான் மற்றும் ஹோண்டா இணைந்தால் இரு நிறுவனங்களிடம் இருக்கும் நிதி ஆதாரம், உற்பத்தி தளம், தொழில்நுட்பம், ஊழியர்கள் படை போன்ற பல விஷயங்களை ஒருங்கிணைந்து குறைவான விலையில் தரமான கார்களை அறிமுகம் செய்ய முடியும், இதேபோல் இந்த கூட்டணி சந்தையில் தற்போது உருவாகியிருக்கும் போட்டிக்கு கடுமையான சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதேவேளையில் இரண்டு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன துறையில் ஆர்வம் காட்டி வருகிறது, ஆனால் பெரிய அளவிலான வர்த்தகத்தையோ, வளர்ச்சியோ அடைய முடியவில்லை. இதேவேளையில் சீனாவிலும், உலகளாவிய வர்த்தகத்தில் சீன நிறுவனங்களிடமும் ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை இழந்து வருகிறது. இதை சரிக்கட்டவே நிசான் மற்றும் ஹோண்டா இணைப்பு குறித்த பேச்சுவாத்தையை துவங்கியது.
ஆனால் நிசான் மற்றும் ஹோண்டா இணைப்பில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் தொடர்ந்து குறைந்தது வந்ததும், மதிப்பீடு செய்யும் விஷயத்தில் வழக்கமான பிரச்சனைகளும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததற்கான காரணங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications