இந்தியாவின் நம்பர் ஒன் தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வரும் நீதா அம்பானி தன்னுடைய பிறந்தநாளில் ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மும்பைக்கு அருகே கார்ஜத் (Karjat) பகுதியில், ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் சிறப்பு பராமரிப்பு தேவைப்படுபவர்களுக்காக நீதா அம்பானி 'அனந்த் ஆச்ரய்' (Anant Ashray) என்ற பெயரில் பிரம்மாண்டமான ஒரு நகரத்தை கட்டமைக்க இருக்கிறார். 100 ஏக்கர் பரப்பளவில் 5000 வீடுகள் கொண்ட ஒரு நகரமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

லாபநோக்கமற்ற முறையில் இந்த நகரம் அமைக்கப்படும் என ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி அறிவித்துள்ளார். இதற்காக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நவம்பர் 1ஆம் தேதி அதாவது நேற்று நடைபெற்றது. நேற்று தான் நீதா அம்பானியின் பிறந்தநாளும் கூட, தன்னுடைய பிறந்தநாளில் அவர் இந்த திட்டத்தை அறிவித்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நகரம் எட்டு தனித்தனி குடியிருப்பு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புனித நதிகளின் பெயர்கள் இந்த கிராமங்களுக்கு சூட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமமும் ஒரு பிரத்யேக நிறம், சின்னம் ஆகியவற்றை கொண்டிருக்கும். வழக்கமான நிறுவனங்கள் சார்ந்த விடுதி போலன்றி, இங்கு வசிப்பவர்கள் சிறிய அளவிலான குடும்ப முறை போன்ற வீடுகளில் தங்குவார்கள். இவர்களுக்கு உதவ பிரத்யேக காப்பாளர்களும் இருப்பார்கள்.
இந்த நகரத்தில் பல்நோக்கு மருத்துவ மற்றும் மறுவாழ்வு சேவைகள் கிடைக்கும். சிறப்பு கல்வி வசதிகள் மற்றும் இங்குள்ள ஊழியர்களின் குழந்தைகளுக்காக ஒரு பொதுப்பள்ளி ஆகியவையும் கட்டப்பட உள்ளன. இங்கே வசிப்பவர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் பேக்கரி, காபி ஷேப் , கைவினை பொருட்கள் தயாரிப்பு மையங்கள், விலங்குகள் பராமரிப்பு பண்ணை ஆகியவை அமைக்கப்படுகின்றன.
அது தவிர விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், இசை மற்றும் கலை மையங்கள், விளையாட்டு மைதானங்கள், பண்ணைகள், பட்டறைகள், கோயில் ஆகியவை வளாகத்திற்குள் இடம் பெற உள்ளன. சுமார் 15000 பேர் தங்கும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெறும் வளாகத்திற்குள் இருப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல், அருகிலுள்ள கிராம மக்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என ரிலையன்ஸ் அறக்கட்டளை கூறுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான அன்பும் பராமரிப்பும் தேவை, அதே போல முதியவர்களுக்கு மரியாதை கொண்ட வாழ்வும் தேவை, அவற்றை தரும் ஒரு இடமாக இது இருக்கும் என நீதா அம்பானி கூறியுள்ளார்.மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு இடமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

