வாரணாசி: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அம்பானி குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனந்த் அம்பானியின் தாயும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீதா அம்பானி திருமண அழைப்பிதழை வாரணாசிக்கு கொண்டு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்த போது பேட்டியளித்த அவர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சென்டின் திருமண அழைப்பிதழை நான் கொண்டு வந்திருக்கிறேன். கடவுளின் பாதங்களில் வைத்து அதனை பூஜை செய்ய போகிறேன் என கூறினார்.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், மிகப்பெரிய தொழிலதிபரான விரன் மெர்சென்ட்டின் மகளான ராதிகா மெர்சென்டிற்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக பத்திரிகைகள் அடிக்கப்பட்டுள்ளன. தற்போது கோயில்களில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது பல்வேறு விருந்தினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஜியோ மையத்தில் மூன்று நாட்களுக்கு இந்த திருமண நிகழ்வு நடைபெறும் என தெரிகிறது.
ஜூலை 12ஆம் தேதி திருமண நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அன்று விருந்தினர்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல ஜூன் 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நிகழ்வு நடைபெற இருக்கிறது. ஜூன் 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது நடைபெற இருக்கிறது. இந்த மூன்று நாட்களுமே ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையம் திருமண கோலம் பூண்டிருக்கும்.

ஏற்கனவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சென்ட்டின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் இரண்டு முறை பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன. குறிப்பாக மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் மூன்று நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலகமெங்கிலும் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேபோல அண்மையில் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் மூன்று நாட்களுக்கு பார்ட்டி நடத்தப்பட்டது.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தங்களின் செல்ல மகனின் திருமண நிகழ்வை உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்த வேண்டும் என நினைக்கின்றனர். இதற்காக தான் பல துறை பிரபலங்களை வரவழைத்து மிக பிரம்மாண்டமான முறையில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகளை நடத்தி முடித்தனர். ஏற்கனவே, ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் புதிதாக 14 கோயில்களை அம்பானி குடும்பம் கட்டியுள்ளது.

Story written by: Devika


Click it and Unblock the Notifications