டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்ப கண்காட்சியான 19வது இ.வி. எக்ஸ்போ நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
இந்த தொடக்க விழாவில் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: 2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்டுக்கு 1 கோடி எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படும். மேலும் இந்த பிரிவில் சுமார் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும். வாகன தரவுத் தளத்தின்படி, 34.54 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் ஏற்கனவே இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலகின் நம்பர் 1 எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக இந்தியா மாறும் சாத்தியம் இருக்கிறது. சுத்தமான எரிசக்தி உற்பத்தி மற்றும் வெகுஜன பயன்பாட்டில் இந்தியாவை தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மாசுபடுத்தும் வாகனங்களை ஹைபிரிட் மற்றும் முழு மின் வாகனங்களாக மாற்றியமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு, தொழில்நுட்ப விளக்கங்கள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன.
பொது போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வாகனங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது. 2023 வரை எலக்ட்ரிக் வாகன அமைப்பிற்கு இந்தியாவில் ரூ.20 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
OEMகள், உதிரி பாகங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தியாளர்கள் மற்றும் சார்ஜிங் பார்ட் ஆபரேட்டர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாகும். 2015ம் ஆண்டு முதல் இந்தியாவின் முன்னோடி எலக்ட்ரிக் வாகன கண்காட்சியை ஏற்பாடு செய்ததற்காகவும், இளம் தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும், இந்தியாவை எலக்ட்ரிக் வாகன துறையில் தன்னிறைவாக மாற்றுவதற்கு பங்களிக்கவும் ஒரு தளத்தை உருவாக்கியதற்காகவும் கண்காட்சி அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் சுமார் 218 தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் சமீபத்திய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, மாசு இல்லாத 2,3 மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்கள், பாகங்கள் மற்றும் அணிகலன்கள், சார்ஜிங் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி 24ம் தேதி நிறைவடைகிறது. நாடு முழுவதும் அனைத்து வகையான எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் சார்ஜிங் வசதி உள்கட்டமைப்பை உருவாக்கினால் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications