தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசு'பாஸ்டேக்' முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர், தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்து, வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் வசூலித்துக் கொள்ளும். நேரடி பணப் பரிவர்த்தனையை தவிர்க்கவும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கவும், இந்த பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது.
ரூ.3,000 விலையில் வருடாந்திர பாஸ் : இந்நிலையில், நெடுஞ்சாலை பயண வசதியை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, தனியார் வாகனங்களுக்கு FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

ரூ.3,000 விலையில் கிடைக்கும் இந்த பாஸ் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் 200 பயணங்கள் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் எது முதலில் வருகிறதோ அதுவரை இது செயல்படும்.
எந்தெந்த வாகனங்களுக்கு பொருந்தும்..?: இந்த ரூ.3,000 பாஸ் முறை கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த முயற்சி, சுங்கக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதையும், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மென்மையான, வேகமான பயணத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையானது குறிப்பாக 60 கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பயனளிக்கும். இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒரு பிரச்சனையை தீர்க்கும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்தக் கொள்கை காத்திருப்பு நேரத்தையும், வாகன நெரிசல்களையும், சுங்கச்சாவடிகளில் அவ்வபோது ஏற்படும் தகராறுகளையும் குறைக்கும். மேலும், இதனால் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருடாந்திர பாஸ் பெறுவது எப்படி..?: ராஜ்மார்க் யாத்ரா செயலியில் கிடைக்கும் பிரத்யேக இணைப்பைப் பயன்படுத்தியும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலமாகவும் வாகன ஓட்டிகள், விரைவில் வருடாந்திர பாஸை செயல்படுத்தவும், புதுப்பித்துக் கொள்ளவும் முடியும்.
தற்போது நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணங்கள் வசூலித்து வருகின்றனர். FASTag தொழில்நுட்பம் மூலமாக வாகனங்கள் சுங்க கட்டணங்களை செலுத்தி வருகின்றன. ஆனால், பல இடங்களில் வாகனங்கள் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது நேர இழப்பு, போக்குவரத்து நெரிசல், எரிபொருள் சிதைவு, தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. சுங்கச்சாவடி கட்டணங்களை பொறுத்தவரை ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. பாதி சுங்கச்சாவடிகளில் முதல் 6 மாதத்திலும், மீதம் உள்ள சுங்கச்சாவடிகளில் அடுத்த 6 மாதத்திலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications