பெங்களூரு: இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் வீட்டு வாடகைகளின் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. அந்த வகையில் பெங்களூரு நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 19 சதவீதம் வரை வீட்டு வாடகை உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் 2023-24 ஆம் ஆண்டில் 7 சதவீதமும், 2022-23 ஆம் ஆண்டில் 12 சதவீதமும் என வீட்டு வாடகை உயர்ந்துள்ளதாக நோ புரோக்கர் நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக ஒயிட்ஃபீல்டு, சர்ஜாபூர், கோரமங்களா, ஹெப்பல் மற்றும் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வீட்டு வாடகை மதிப்பு 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பெங்களூருவில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளை விட கேட்டட் கம்யூனிட்டிகளில் இருக்கும் வீடுகளுக்கு தான் டிமாண்ட் அதிகமாம்.

பாதுகாப்பு, குழந்தைகள் விளையாடுவதற்கு பூங்காக்கள் உள்ளிட்டவை கிடைப்பதால் பலரும் கேட்டட் கம்யூனிட்டிகளில் வீடு வாடகைக்கு செல்லவே விரும்புவதாக நோ புரோக்கர் கூறுகிறது. பெங்களூருவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களும் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர், ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவித்துவிட்டன.
இதன் காரணமாக ஊழியர்கள் பெங்களூருக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக பெங்களூருவில் ஐடி அலுவலகங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் வீட்டு வாடகை மதிப்பு உயர்ந்துள்ளது. அதேவேளையில் பெங்களூருவில் வேலை வாய்ப்பு சந்தை இந்தியாவிலேயே மிகவும் வலுவாக இருப்பதால் புதிதாக வேலை தேடி பெங்களூருக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை என கூறுகிறார் நோ புரோக்கர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் அகர்வால். இதுவும் வாடகை வீடுகளுக்கான தேவையும் அவற்றின் மதிப்பும் உயரக் காரணம் என்கிறார்.
கொரோனா காலத்தில் பெங்களூரு நகரில் வீடுகளின் கட்டுமான பணிகள் மந்தநிலையில் இருந்தன. தற்போது வாடகை வீடுகளின் தேவையும் அதற்கான சப்ளைக்கும் இடையே இடைவெளி இருப்பதும் வாடகை மதிப்பு உயர காரணமாக சொல்லப்படுகிறது. புனே, மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் வீட்டு வாடகை மதிப்பு 4-9 சதவீதம் உயர்ந்ததாக நோ புரோக்கர் கூறுகிறது.
2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 12 நகரங்களில் வீட்டு வாடகைகளின் மதிப்பு சுமார் 7.4 சதவீதம் என உயர்ந்திருக்கிறதாம். இவ்வாறு ஒவ்வொரு காலாண்டிற்கும் வீட்டு வாடகைகள் உயர்கின்றனவாம். தற்போது வீட்டு உரிமையாளர்கள் இதுபோல வாடகைக்கு ஆட்களை தேர்வு செய்வது, அவர்களிடம் இருந்து வாடகை பணத்தை வாங்குவது, வாடகை ஒப்பந்தத்தை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்கு முகமைகளை நாடும் போக்கு அதிகரித்துள்ளதாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications