இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் செயல்படக்கூடிய சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து முக்கியமான ஒரு மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. வாகன ஓட்டிகள் இந்த மாற்றத்தை தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சுங்க கட்டணத்தை செலுத்தும் நடைமுறையில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவில் நெடுஞ்சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்தியாக வேண்டும். இந்த சுங்க கட்டணம் தற்போது ஃபாஸ்டேக் நடைமுறையில் செலுத்தப்படுகிறது. நம்முடைய வாகனங்களில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது அது தானாகவே ஸ்கேன் செய்யப்பட்டு இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து சுங்க கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால் 100 சதவீத வாகன ஓட்டிகள் இன்னும் ஃபாஸ்டேக் நடைமுறைக்கு மாறவில்லை. இன்னமும் ரொக்கமாக சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை செலுத்துபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். இதில் தான் மிகப்பெரிய மாற்றம் அமலுக்கு வருகிறது. வரும் பத்தாம் தேதியிலிருந்து சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக சுங்க கட்டணத்தை செலுத்த முடியாது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இது தொடர்பான விதிகளில் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறத. இதன்படி ஏப்ரல் பத்தாம் தேதியில் இருந்து அனைத்து சுங்கச்சாவடி பரிவர்த்தனைகளும் ஃபாஸ்டேக் மற்றும் யுபிஐ போன்ற மின்னணு நடைமுறைகளில் மட்டுமே இருக்கும் என தெரிவித்திருக்கிறது. சுங்கச்சாவடி கடக்க கூடிய வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லை என்றால் யூபிஐ பயன்படுத்தி சுங்க கட்டணம் செலுத்தலாம். ஆனால் வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டும்.
அதே வேளையில் ரொக்கமாக பணம் கொடுத்தால் சுங்கச்சாவடியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே உங்களுடைய வாகனத்தில் ஃபாஸ்டேக் இருப்பதையும் அந்த கணக்கில் பணம் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள் இல்லை என்றால் யூபிஐ கணக்கிலாவது பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டுமே இல்லை என்றால் ரொக்கமாக பணம் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மேலும் குறிப்பிட்ட வாகனம் ஃபாஸ்டேக், யுபிஐ என இரண்டு வழிகளிலும் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு கட்டணம் குறித்த தகவல் அனுப்பி வைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை செலுத்தி விட வேண்டும் இல்லை என்றால் வழக்கமான கட்டணத்தை போல இரு மடங்கு தொகையை செலுத்த வேண்டியிருக்கும் அதாவது அபராதம் சேர்த்து செலுத்த வேண்டியது இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் கணக்கு மற்றும் அதில் பணம் இருப்பதை உறுதி செய்து பயணத்தை தொடங்குங்கள், இல்லை என்றால் யுபிஐ கணக்கிலாவது பணம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications