வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்னும் ஐந்து நாட்களில் இருக்கும் நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் ஐந்து நாட்களே இருக்கின்ற நிலையில் ஏராளமானோர் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது வருமான வரி இணையதளம் செயல்படாமல் இருக்கிறது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த சூழலில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என வெளியாகி இருக்கக்கூடிய செய்திகள் பொய்யானவை என தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு அறிவிப்பையும் வருமான வரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும், சமூக வலைத்தளங்களில் வெளியாக கூடிய இதுபோன்ற போலியான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என வருமானவரித்துறை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
இதன்படி வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஜூலை 31ஆம் தேதிக்குள் அனைவரும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது என்பதை வருமான வரித்துறை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் வருமான வரியினை திரும்ப பெற்றுத் தருவதாக கூறி தற்போது பல்வேறு மோசடிகள் நடைபெற்ற வருவதாக சுட்டிக்காட்டி உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இதுபோன்ற மோசடிகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.
மோசடியாளர்கள் மின்னஞ்சல் அனுப்புவது எஸ்எம்எஸ் அனுப்புவது போன்றவை மூலம் உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை திருடி கொள்கிறார்கள். எனவே வருமான வரி பணத்தை திரும்ப பெற்றுத் தருவேன் என கூறினால், அதனை நம்பாதீர்கள் என வருமான வரித்துறை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமானவரித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில் ஜூலை 22 ஆம் தேதி வரை 4 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே தேதியில் ஒப்பிடும்போது 8 சதவிகிதம் அதிகமாகும். ஒரு நாளைக்கு சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜூன் 23ஆம் தேதியிலேயே 1 கோடி பேர் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விட்டனர். ஜூலை 7ஆம் தேதி 2 கோடி ஜூலை 16ஆம் தேதி 3 கோடி , ஜூலை 22ஆம் தேதி 4 கோடி என இந்த எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications