தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது அந்த சாலையை பராமரிக்க கூடிய நிறுவனத்திற்கு கார்கள், பேருந்துகள், கனரக வாகனங்களில் செல்வோர் சுங்க கட்டணம் எனப்படும் டோல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுங்க கட்டணத்தை செலுத்துவதால் பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து தான் மத்திய அரசு ஃபாஸ்டேக் முறையை நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்படி வாகனங்களில் இருக்கும் ஃபாஸ்டேக்கை கொண்டு தானாகவே கணக்கில் இருந்து சுங்க கட்டணம் என்பது எடுத்துக் கொள்ளப்படும் . எனவே வாகனங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது.

குறிப்பிட்ட சுங்கச்சாவடியை கடக்கும் போது அந்த ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்டு அந்த கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும். ஒருவேளை தங்களுடைய வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லாத நபர்கள் ரொக்கமாக சுங்க கட்டணத்தை செலுத்தலாம். ஆனால் ஃபாஸ்டேக் கட்டணத்தை விட ரொக்கமாக பணம் செலுத்தும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் .
அதாவது ஒரு நபர் தன்னுடைய கார் போன்ற வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லாமல் பயன்படுத்துகிறார். அவர் ஒரு சுங்கச்சாவடியை கடக்கிறார் எனும் போது வழக்கமான சுங்க கட்டணம் நூறு ரூபாய் என்றால் இவர்கள் ரொக்கமாக செலுத்தும் போது இரண்டு மடங்கு அதாவது 200 ரூபாயாக செலுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்கு பயந்து அனைவருமே ஃபாஸ்டேக் கணக்கை பெறுவார்கள் என்ற நோக்கத்தில் தான் அரசு இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வந்திருக்கிறது .
இந்த சூழலில் வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லாத நபர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் செலுத்துவதிலிருந்து சற்றே நிவாரணம் அளிக்கக்கூடிய ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பானையில் சுங்கச்சாவடியை கடந்து செல்லக்கூடிய வாகனத்தில் ஃபாஸ்டேக் இல்லை என்றால் அந்த வாகன ஓட்டிகள் யுபிஐ வாயிலாக சுங்க கட்டணத்தை செலுத்தலாம் அவ்வாறு செலுத்தும் போது வழக்கமான ஃபாஸ்டேக் சுங்க கட்டணத்தை விட 1.25 மடங்கு அதிக கட்டணத்தை யுபிஐ மூலம் செலுத்த வேண்டியிருக்கும். இது ரொக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட குறைவு என தெரிவித்திருக்கிறது.
வரும் நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து இந்த நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அமலுக்கு வர இருக்கிறது. தற்போது நெடுஞ்சாலைகளை பயன்படுத்தக்கூடிய 98 சதவீத வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட்டேக் முறையில் தான் பணத்தை செலுத்துகிறார்கள். இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் என்பது 47 வினாடிகள் ஆக குறைந்துவிட்டது .
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஒரு நபர் ஒரு சுங்கச்சாவடியை கடக்க 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் ஃபாஸ்டேக்கில் 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் ரொக்கமாக கொடுத்தால் 200 ரூபாய், அதுவே யுபிஐ முறையில் செலுத்தினால் 125 ரூபாய் ஆகும். இந்த புதிய நடைமுறைதான் நவம்பர் 15ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமலுக்கு வர இருக்கிறது .


Click it and Unblock the Notifications