இந்திய வங்கி துறையில் கடந்த சில மாதங்களாக பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அதிகப்படியான ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட சந்தையாக இருக்கும் காரணத்தால் இந்திய வங்கித்துறையில் எப்படியாவது நுழைய வேண்டும் என்பதில் வெளிநாட்டு முதலீட்டாலர்கள் குறியாய் உள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் FDI வரம்பை தற்போது இருக்கும் 20 சதவீத அளவீட்டை 49 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு வருகிறது என அக்டோபர் மாதத்தில் ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. இந்த தகவல் பங்கச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்தடுத்த வந்த அறிவிப்பால் தற்போது வங்கி பங்குகள் பெரும் சரிவை ஏற்படுத்தியது.

கடந்த ஒரு மாதமாக மத்திய அரசு நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளாக இணைக்க உள்ளதாக தகவல் வெளியானது, இந்த தகவலை நாடாளுமன்றத்தில் பொதுத்துறை வங்கிகள் இணைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், அன்னிய முதலீட்டு அளவில் கொண்டு வரப்படும் மாற்றம் தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) வரம்பை 20 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த எந்தத் திட்டமும் இல்லை என்று அரசு தெரிவித்தது. நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக கொடுத்த பதிலில் "இதுபோன்ற எந்த முன்மொழிவும் அரசிடம் இல்லை" என்று தெரிவித்தார்.
இதனால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்தனர், டிசம்பர் 3 அன்று பொதுத்துறை வங்கி பங்குகள் கடுமையாக சரிந்தன. நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 3 சதவீதத்துக்கு மேல் குறைந்து 8,257.40 என்ற அளவில் இருந்தது. நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு இரண்டாவது நாளாக சரிந்தது. இந்தியன் வங்கி பங்குகள் 6 சதவீதத்துக்கு மேல் குறைந்து 807.65 ரூபாயாக இருந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கி 4 சதவீதத்துக்கு மேல் சரிந்தது.
பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை 3 சதவீதத்துக்கு மேல் குறைந்தன. பஞ்சாப் & சிந்த் வங்கி, சென்ட்ரல் வங்கி ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி ஆகியவை 2 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. ஸ்டேட் வங்கி ஆஃப் இந்தியா ஏறத்தாழ 2 சதவீதமும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, வங்கி ஆஃப் மகாராஷ்டிரா 1 சதவீதத்துக்கு மேலும் குறைந்தன.


Click it and Unblock the Notifications