18 வயது முதல் 65 வரையிலான ஆண்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்க வேண்டாம் என ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு ரஷ்ய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக ரஷ்ய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதான ஆண்களுக்கு விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய அரசு எதற்காக இந்த கோரிக்கையை விமான நிறுவனங்களுக்கு விடுத்து உள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.
விமான டிக்கெட்டுகளை விற்க வேண்டாம்
18 முதல் 65 வயதுக்குட்பட்ட ரஷ்ய ஆண்களுக்கான விமான டிக்கெட்டுகளை விற்பதை ரஷ்ய விமான நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக சில ரஷ்ய ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தொலைக்காட்சி உரையில், உக்ரைன் நாட்டுடன் போரிடுவதற்கு அதிக ராணுவ வீரர்களை திரட்ட இருப்பதாக தெரிவித்திருந்தார். எனவே உள்நாட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடு செல்வதை தவிர்க்கவே இந்த கோரிக்கை என்றும் கூறப்படுகிறது.
விமானங்களில் முன்பதிவு
தற்போது வந்துள்ள செய்திகளின்படி ரஷ்யாவில் இருந்து ஆர்மீனியா, ஜார்ஜியா, அஜர்பைஜான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள் அனைத்தும் புதன்கிழமை விற்றுத் தீர்ந்தன என்று பிரபல ரஷ்ய வலைத்தளமான Aviasales தெரிவித்துள்ளது. அதேபோல் துருக்கிய ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில், ரஷ்யாவிற்கும் அண்டை நாடுகளுக்குமான பயண டிக்கெட்டுக்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேற அனுமதியில்லை
இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற இளைஞர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிறர் நாட்டை விட்டு வெளியேற அனுமதியில்லை என்றும் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
300,000 ஆண்களை ராணுவத்தில் சேர்க்க திட்டம்
உக்ரைன் நாட்டுடனான போர் தற்போது உச்சத்தில் இருந்து வரும் நிலையில் 300,000 ஆண்கள் ராணுவ சேவை செய்ய அழைக்கப்படலாம் என ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு அவர்கள் கூறினார். எனவே இன்னும் சில காலத்திற்கு ரஷ்யாவில் இருந்து 18-65 வயதுள்ள ஆண்கள் யாரும் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications