ஈரான் போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து நின்று போயிருக்கிறது. ஏற்கனவே எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு உபயோகத்திற்கு சிலிண்டர் முன்பதிவு செய்தும் ஏராளமானவர்கள் இதுவரை சிலிண்டர் கிடைக்கவில்லை என புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர்.
சிலிண்டர் போலவே பெட்ரோல் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கக்கூடிய பெட்ரோல் நிலையங்களில் மக்கள் தங்களுடைய வாகனங்களை கொண்டு சென்று டேங்குகளை நிரப்பி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் கேன்களிலும் பெட்ரோல் டீசல் வழங்குமாறு கேட்கிறார்கள்.

பெட்ரோல் நிலையங்கள் எங்கும் வாகன ஓட்டிகள் வரிசை கட்டி நிற்கின்றனர் . இந்த சூழலில் தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முரளி பொதுமக்கள் பயம் கொள்ள வேண்டாம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள சுமார் 7000 பெட்ரோல் பங்குகளில் அடுத்த 21 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு இருக்கிறது என கூறியிருக்கும் அவர் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து விநியோகமும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சீராக உள்ளது என தெரிவித்திருக்கிறார்.
பொதுமக்கள் பயத்தில் அதிக அளவில் பெட்ரோல் வாங்கி செல்வதால் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பொதுமக்கள் பயம் கொள்ள வேண்டாம் தேவையான அளவு பெட்ரோல் கையிருப்பு இருக்கிறது எனவே பெட்ரோல் நிலையங்களை நோக்கி படை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

அதேபோல பெட்ரோல் நிலையங்களில் கேன்களில் பெட்ரோல் தரப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு பெட்ரோல் பங்குகளிலும் இதே போன்ற ஒரு நிலைமைதான் நீடிக்கிறது. இதற்கிடையே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் அனைத்து பெட்ரோல் பங்குகளும் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன எனக் கூறியிருக்கிறது. போதுமான அளவு பெட்ரோல் டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் கையிருப்பு உள்ளன விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது வதந்திகளை நம்பி மக்கள் தேவையின்றி பீதி அடைய வேண்டாம் என குறிப்பிட்டு இருக்கிறது.
இதற்கிடையே மத்திய அரசு இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை தடுக்கவும் எரிவாயு விநியோகத்தை சீர்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் ஈரான் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் அரக்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கொடி ஏந்திய கப்பல்களை ஹார்முஸ் நீரினை வழியாக செல்ல அனுமதி அளிப்பதாக ஈரான் தெரிவித்து இருக்கிறது.
இதன்படி இந்தியாவை சேர்ந்த எண்ணெய் கப்பல்கள் எந்த தடையும் இல்லாமல் ஹார்முஸ் நீரினை வழியாக கடந்து இந்தியாவை வந்தடைய முடியும். அது மட்டும் இல்லாமல் மற்றொருபுறம் இந்தியா ரஷ்யாவிடம் இருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து இருக்கிறது. அந்த எண்ணெய் கப்பல்களும் இந்தியாவை நோக்கி வருகை தந்த வண்ணம் இருக்கின்றன.
அப்படியே ஒரு மோசமான சூழ்நிலை ஏற்பட்டாலும் இந்தியாவிடம் இதுபோன்ற ஆபத்துக் காலங்களில் எடுத்து பயன்படுத்துவதற்காக ஏற்கனவே 250 மில்லியன் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய் சேமித்து வைத்திருக்கிறது. அதனை எடுத்து மத்திய அரசு படிப்படியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும். எனவே பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.


Click it and Unblock the Notifications