அமெரிக்க அரசு PERM திட்டத்தின் மூலம் கிரீன் கார்டு பெறுவதற்கு டிசிஎஸ் உட்பட 8 நிறுவனங்களுக்குத் தடை செய்துள்ள நிலையில், இதன் மூலம் இந்திய ஐடி சேவைத் துறைக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என ஐடி ஊழியர்கள் குழப்பத்தில் இருக்கும் வேளையில் டிசிஎஸ் முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
இந்த தடை மூலம் அமெரிக்காவில் டிசிஎஸ் நிறுவனத்திற்கோ, ஊழியர்களுக்கோ, அல்லது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையிலோ எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என டிசிஎஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கத் தொழிலாளர் துறை தடை செய்யப்பட்ட 8 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுத்து விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு டிசிஎஸ் ஒத்துழைப்பு அளிப்பதாகவும், விதிகள் படி நடப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் டிசிஎஸ் தனது வர்த்தகத்திற்குத் தேவையான ஊழியர்கள் தேவையை உள்ளூரில் இருந்தே தேர்வு செய்து வருவதாகவும், அதேபோல் கல்லூரியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைத் தேர்வு செய்து வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\
இதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் 31 அலுவலகங்கள் மற்றும் டெலிவரி சென்டர்களுக்கு தேவையான ஊழியர் படையை மொத்தமாக கிரீன் கார்டு தேவை இல்லாமல் பூர்த்தி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்கள் டிரம்ப் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அமெரிக்காவில் தனது ஊழியர்கள் தேவையை மாறுபட்ட முறையில் பூர்த்தி செய்து வருகிறது. அமெரிக்க ஊழியர்கள், கேம்பஸ் ஹயரிங் ஆகியவற்றைத் தாண்டி அமெரிக்க டைம் சோனில் இருக்கும் பகுதிகளான கனடா, மெக்சிகோ போந்ற நாடுகளில் அலுவலகங்களையும், ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதன் வாயிலாக டிசிஎஸ் மட்டும் அல்லாமல் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் ஹெச்1பி விசாவுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கும் எண்ணிக்கையும் குறைத்துள்ளது.
சரி PERM என்றால் என்ன..?
PERM என்பது அமெரிக்கக் குடியுரிமை அதாவது Green Card பெறுவதற்காக வெளிநாட்டு ஊழியர்கள் சார்பில் அமெரிக்க நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பமாகும்.
உதாரணமாகக் கூகுள் நிறுவனத்தில் ஒரு ஊழியர் ஹெச்1பி விசா கீழ் பணியாற்றுகிறார் என வைத்துக்கொள்வோம். இவர் ஏஐ பிரிவில் பணியாற்றும் முக்கிய அதிகாரியாக இருக்கிறார், இவரை இழக்கக் கூடாது எனக் கூகுள் நிர்வாகம் நினைத்தால் இவரைத் தக்க வைத்த PERM திட்டத்தின் கீழ் கிரீன் கார்டு அளிக்க நிறுவனம் முடிவு செய்யும்.
இப்படி தான் PERM திட்டம் இயங்கும், ஒரு ஹெச்1பி விசா கீழ் பணியாற்றும் ஊழியருக்கு வேலைவாய்ப்பு அடிப்படையில் நிறுவனத்தின் வாயிலாக கிரீன் கார்டு பெறும் திட்டமாகும். இப்பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்யும் போது முன்னுரிமை அதிகரிக்கும்.
அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்கள்..
PERM திட்டத்தை அதிகம் பயன்படுத்துவது அமெரிக்க டெக் நிறுவனங்கள் தான் என அமெரிக்க அரசு தரவுகள் கூறுகிறது, குறிப்பாக அமேசான், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்றவை தான். இதைத் தாண்டி தான் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் வருகிறது.


Click it and Unblock the Notifications
