பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்கள் ஊழியர்களில் 2% பேரை வேலையில் இருந்து நீக்குவதாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான டிசிஎஸ் இந்தியாவின் நம்பர் ஒன் ஐடி சேவை நிறுவனம்.
டிசிஎஸ் பணிநீக்கம்: டிசிஎஸ் வேலையை அரசு வேலை போல ஐடி ஊழியர்கள் கருதினர். இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டது . இந்திய ஐடி துறைக்கே இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிசிஎஸ்-இன் இந்த அறிவிப்பை மற்ற நிறுவனங்களும் பின் தொடரும் என்ற அச்சம் ஐடி ஊழியர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

ஏஐ வருகை: ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை, ஆட்டோமேஷன் மற்றும் ஐடி தேவை குறைந்தது ஆகியவை காரணமாகவே டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. மத்திய மற்றும் மூத்த நிலை அளவில் இருக்கக்கூடிய ஊழியர்கள் தான் இந்த பணி நீக்க நடவடிக்கையில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்போசிஸ் அறிவிப்பு: இந்த சூழலில் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஐடி ஊழியர்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது .தங்களுடைய நிறுவனம் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுக்காது என அதன் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டு இருக்கும் செய்தியில் சலில் பரேக் இந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் கூடுதலாக 20,000 பிரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது அது நடக்கும் என்றும் பணிநீக்கம் கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏஐ திறன் பயிற்சி: இன்போசிஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 2,75,000 ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கி இருப்பதாக கூறும் சலில் பரேக், ஆட்டோமேஷன் உள்ளிட்டவற்றின் வருகையால் இன்போசிஸ் நிறுவனத்திற்கும் அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கூறி இருக்கிறார். இன்போசிஸ் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்திற்கு படிப்படியாக மாறி வருகிறது என தெரிவித்துள்ளார்.
ஐடி துறை சூழல் மாறும்: எங்களுடைய கவனம் தற்போது ஊழியர்களுக்கு ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவுகளில் பயிற்சி வழங்குவது தான் என தெரிவித்துள்ளார். தன்னுடைய பார்வையின்படி தற்போது மேக்ரோ பொருளாதார சூழல்கள் மாற்றம் அடைந்து ஐடி துறை நிலைத்தன்மை பெரும் என்றே நான் கருதுகிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார் .
ஏஐ மூலம் செயல்திறன் மேம்பாடு: தற்போது ஐடி துறையில் நடைபெற்று வருவது ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றமே தவிர ஐடி துறை வீழ்ச்சி கிடையாது என கூறியிருக்கும் அவர் ஏஐ பயன்பாடு காரணமாக எங்களுடைய உற்பத்தி திறன் 5 லிருந்து 15% வரை உயர்ந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். நிறுவனத்திற்குள் ஏஐ பயன்பாடு இருந்தாலும் முக்கிய பணிகளை மனிதர்கள் தான் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது, மனிதர்கள் வேலையை மேம்படுத்தும் கருவியாகவே ஏஐ பயன்படுத்துகிறோம் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications