உபர் நிறுவனம் உலகளவில் பல்வேறு நகரங்களில் இயங்குகிறது. உபர் அப்ளிகேஷன் மூலம் பயணிகள் தங்களுக்கு அருகில் உள்ள ஓட்டுனர்களை எளிதாக கண்டறிந்து பயணிக்க முடியும். இந்நிலையில் உபர் நிறுவனம் இந்தியாவில் தனது ஆட்டோ ரிக்ஷா சேவையில் ஒரு மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி உபர் ஆட்டோக்கள் சந்தா அடிப்படையில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் முழுவதும் ஆட்டோ ஓட்டுனருக்கு மட்டுமே.
இதன் மூலம் உபர் நிறுவனம் எந்த ஒரு கமிஷனையும் பெறாது. இந்த புதிய முறையின் கீழ் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் அனைத்து உபர் ஆட்டோ பயணங்களுக்கும் ரொக்கமாக தான் பணம் செலுத்த வேண்டும். உபர் இந்தியாவின் கூற்றுப்படி, உபர் அப்ளிகேஷன் பயனர்களுக்கு அருகில் உள்ள ஆட்டோ ரிக்ஷாக்களை கண்டறிய உதவும் என்றாலும், சேவைக்கு எந்த வகையிலும் உபர் பொறுப்பேற்காது.

ஓட்டுநர்கள் சுயமாக செயல்படுவதாகவும், உபரின் பங்கு ஓட்டுநர்களுடன் பயணிகளை இணைப்பதோடு முடிந்து விடுவதாகவும், அதற்காக எந்தவித கமிஷனையும் உபர் வசூலிப்பதில்லை என்றும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ ரிக்ஷாக்களை முன்பதிவு செய்துவிட்டு ரத்து செய்தால் அதற்கான கட்டணங்களையும் உபர் வசூலிக்காது. உபர் அப்ளிகேஷனில் முன்பதிவு செய்யும்போது அது ஒரு கட்டணத்தை பரிந்துரை செய்யும். ஆனால் இறுதித் தொகையை ஓட்டுனர் மற்றும் பயனரே தீர்மானிக்க முடியும். எனவே பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இடையிலான கட்டணம் தொடர்பான தகராறுகளில் உபர் ஈடுபடாது.
வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: இந்த நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்கள் ரொக்கமாக மட்டுமே ஆட்டோவுக்கு பணம் செலுத்த முடியும். அதாவது கிரெடிட், டெபிட் கார்டுகள், உபர் அப்ளிகேஷன்கள், உபர் கிரெடிட்கள், டிஜிட்டல் கட்டண முறைகளை பயன்படுத்த முடியாது.
பயணத்திற்கான உங்கள் கட்டணங்களை 100% நேரடியாக ஓட்டுனருக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும். தற்போது பலருக்கும் ஒரு கேள்வி எழலாம். ஆட்டோ ஓட்டுநருக்கு யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த முடியுமா? என்று. தேவைப்பட்டால் நீங்கள் உங்கள் ஆட்டோ ஓட்டுனரின் விருப்பத்திற்கு ஏற்ப பணம் செலுத்தலாம். பயனர்களை ஆட்டோ ரிக்ஷாக்களுடன் இணைப்பதற்கான ஒரு தளத்தை மட்டுமே வழங்க உள்ளதாக உபர் கூறி இருந்தாலும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு விஷயங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications